இது அடியில் குறுகியது என்றாலும் பொருள் நயத்தாலும், அதனை விளக்கும் உணர்வுகளாலும் உரை சிறப்பாலும் மிகவும் உயர்ந்து நிற்பதாகும்.
ஐங்குறு நூறில் உள்ள செய்யுள்கள் ஒவ்வொன்றும் உணரும்போது நம் உள்ளத்தில் ஓவியங்களாக விரிந்து அந்த கால மாந்தர்களுடன் ஒன்று கலக்கச் செய்யும் சொற் சித்திரங்களாகும்.
காதலனும், காதலியும் அன்பால் இணைந்தும் கலந்தும் பிரிந்தும் இருக்கக் கூடிய எண்ணற்ற நினைவுகளையும், பண்பாட்டு மரபினையும் ஐங்குறுநூறில் படித்து மகிழலாம்.
தமிழ் புலவர்களின் இனிய தமிழும் அவர்கள் காட்சிகளை நயமாக்கி சுவை படுத்திய விதமும் நமக்கு அழகிய இலக்கிய வடிவங்களை தருகின்றன.
கற்போர் உள்ளத்தை உவகையடையச் செய்கின்றன. ஐங்குறுநூறு செய்யுட்கள் அனைத்தும் தமிழ் இலக்கிய உலகில் செல்வ களஞ்சியமாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
பழந்தமிழ் மன்னர்களான சேரன் இரும்பெறை மரபில் தோன்றியவன். தலையாளங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனும் சோழன் ராஜசூயம் வேட்ட பெருநர் கிள்ளியும் வாழ்ந்த புகழ் மிகுந்த நாளில் தானும் வாழ்ந்து தமிழ் இனத்தை, மாண்பைப் போற்றி காத்து புகழ் கொண்டவர்கள்.
பாரி வள்ளலின் உயிர் நண்பனான கபிலர் நட்பைப் பெற்றவன். ஆறாத தமிழ் அன்பும் தீராத பேராண்மையும், தணியாத வள்ளல் தன்மையும் குறைவில்லாத தமிழ் புலமையும் தனதாக்கிக் கொண்டவன்.
குருங்கோலியூர் கிழாரால் போற்ற¤ புகழ்ந்து பாராட்டப் பெற்றவன். சோழர் ராஜசூயம் வேட்ட நற்கிள்ளியுடன் பாண்டியன் தலையாலங்கானத்து செறுவென்ற நெடுஞ்செழியனுடன் போரிட்டு அதனால் சோழ பாண்டிய மன்னர்களின் பகைக்கு உள்ளானபோதும் தாய் தமிழின் செம்மையை பேணி காக்க நினைத்தபோது பாண்டிய நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த மதுரை தமிழ் சங்கத்தாருடன் பெருங்கோலியூர்கிழாருடனும் நெருக்கமான உறவு கொண்டவன்.
இதனால் தமிழின் மேன்மை தமிழகத்து தலைவர்கள் மீது எந்தளவு வேரூன்றி இருக்கிறது என்பதை நாம் உணரலாம். ஐங்குறுநூறில் முதலாம் நூறு பாடல்கள் மருத நிலத்தைப் பற்றி வருகின்றது. இது ஓரம்போகியாரால் பாடப்பட்டது.
நெய்தல் நிலம் பற்றி வரும் இரண்டாம் நூறு செய்யுள்கள் அம்மூவனாரால் பாடப்பட்டது. குறிஞ்சிக்கு கபிலர் என்பார்கள். அந்த கபிலரால் மூன்றாம் நூறு குறிஞ்சி நிலத்தைப் பற்றி பாடப்பட்டுள்ளது.
நான்காம் நூறான பாலை நிலத்தைப் பற்றி பாடல்கள் ஓதலாந்தையாரால் பாடப்பட்டது. ஐந்தாம் நூறான முல்லை நிலம் பற்றி முல்லை பேயனாரால் பாடப்பட்டது. “மருதம் ஓரம்போகி, நெய்தல் அம்மூவன், கருதும் குறிஞ்சி கபிலன், கருதிய பாலை ஓதலாந்தை, பனிமுல்லை பேயனே நூலையோ தைங்குறு நூறு” என்பதாகும். இவற்றுள் மருதமும், நெய்தலும், ஐங்குறு நூறு தெளிவுரையில் முதற்பகுதியாக இந்நூலுள் அமைந்துள்ளன.
கூடலூர் கிழார், அவ்வத் திணைச் செய்யுட்களையுச் செய்வதிலே புகழ் படைத்தோரான சங்கத் தமிழ்ச் சான்றோர்களிடம் தம்முடைய பொறுப்பைக் கூறி, அவர்கள் செய்யுட்களையுச் செழுமையோடு ஆக்கித் தர, அவற்றை ஆராய்ந்து அவற்றுட் சிறந்தவாகத் தாம் கண்ட ஐவர் நூல்களைத் தொகுத்துத் தம்முடைய பணியை எளிதாக்கி வெற்றி கண்டவர் எனலாம். இவர்களின் நட்பையும் அன்பான ஒத்திசைவையும் பெற்றவர் என்றும் கூறலாம்.