தமிழ் காப்பியங்களின் பெயரில் பல்வேறு அணிகலன்கள் அமைந்திருப்பது போல சிலப்பதிகாரம் காலில் அணியும் சிலம்பு பற்றியும், மணிமேகலை இடையில் அணியும் மேகலை பற்றியும், சீவக சிந்தாமணி நெஞ்சில் அணியும் சிந்தாமணி பற்றியும், குண்டலகேசி காதில் சூடும் குண்டலம் பற்றியும், வளையாபதி கைகளில் அணியும் வளையல்கள் பற்றியும் சொல்வது போல சூளாமணி திருமுடியில் அணியும் ஓர் அணிகலன் பற்றி உரைக்கிறது.
கற்றோர்கள் சீவகசிந்தாமணி கவிதை அழகுடையது என்றும், சூளாமணி ஓசை அழகுடையது என்றும் கம்பராமாயணம் இவை இரண்டும் கலந்தது என்றும் கூறுவர்.
மேலும், இந்த நூல் வித்யாதாரர் உலகத்தையும் மண்ணுலகத்தையும் நினைப்பது போல காவியத் தலைவன் திவிட்டன் மண்ணுலக மன்னன் மகன். காவியத் தலைவி சுயம்பிரபை வித்யாதாரர் மன்னனின் மகள்.
இக்காவியத்தில் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் திருமணமே சிறப்புடையது என்பதை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதற்கு உவமையாக பொன்னில் பதிக்க வேண்டிய மாணிகத்தை ஈயத்தில் பதித்து வைத்தாலும் மாணிக்கம் மறுப்பதில்லை. அதுபோல, பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணம் எத்தகையது என்றாலும் மணப்பெண் ஏற்றுக் கொள்கிறார் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.
இந்த நூலாசிரியர் 308வது பாடலில் தோலா நாவிற் சுச்சுதன் என்று தன் பெயரை குறிப்பிட்டுள்ளார். அவர் உளவியல் அறிவும், உலகியல் தெளிவும், அரசியல் ஞானமும் பெற்ற சமண சமயத் துறவியாவார்.
கார் வெட்டி அரசன் விஜயன் என்பவன் காலத்தில் வாழ்ந்தவர் என்றும், அவன் வேண்டுகோளை ஏற்று எட்டு வகை சுவைகளும் உறுதிப்பொருள் நான்கும் உள்ள இந்த நூலை இயற்றினார் என்றும் தெரிகின்றது.
சூளாமணி என்னும் இந்தக் காப்பியம், நாட்டுச் சருக்கம் தொடங்கி முக்திச் சருக்கம் வரை 12 சருக்கங்களையும் 2130 பாக்களையும் கொண்டுள்ளது. இந்நூலில் இக்கால நடைமுறைக்கு உகந்தது போல பெரும்பான்மையான நிகழ்ச்சிகளும், சம்பவங்களும் உள்ளதால் தமிழ் கூறும் நல்லுலகம் படித்து பயன் அடையத் தக்க நூலாக விளங்குகிறது.