ஒரு காலகட்டம் வரை அப்புசாமி சிறுகதைகளை, ஐந்து அல்லது ஆறு பக்கத்தில் அடங்கக்கூடிய சிறுகதைகளாகவே எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் அப்புசாமி வளர வளர, அவருடைய உலாவுக்குச் சற்றுக் கூடுதலான இடம் தரவேண்டியவனாகி விட்டேன்.
எந்தப் பத்திரிக்கையாவது அப்புசாமி சிறுகதை கேட்டால், “கொஞ்சம் நீளமான சிறுகதையாக வரும் போலிருக்கிறது. குறைந்தது இரண்டு வாரமாவது தேவைப்படும்,” என்று சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
எடுத்துக்கொள்ளும் பின்னணிகளுக்கு ஏற்ப, சம்பவங்களுக்குத் தக்கவாறு சிறுகதை தன் எல்லையைத் தாண்டிவிடும் கட்டாயம் நேருகிறது. நகைச்சுவை என்பது இழுத்துக் கட்டிய விறைப்பான கூடாரம் போல் இருக்கலாகாது. கொஞ்சம் தொளதொளவென்று - (அரபு ஷேக்குகளின் தாராள கவுன் அளவுக்கு ஒரேயடியான தொள தொளாவாக இல்லாமல், கச்சிதமான தாராளத்துடன் இருப்பதையே விரும்புகிறேன்.)
அப்படிக் கை மீறிய சிறுகதைகளே இந்த மூன்று கதைகளும்.
-பாக்கியம் ராமசாமி