ப. சரவணன் (மே 14, 1978) தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பொதுவாசிப்புக்கு உரிய நாவல், சிறுகதை, கவிதை, வரலாறு போன்றன சார்ந்து 150க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
இவர் சு. பழனிசாமி - ப. அனுசுயா தேவி தம்பதியருக்கு 14 மே 1978-ல் சென்னையில் பிறந்தார். மதுரை அல்-அமீன் பள்ளியில் கல்வியைத் தொடங்கி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் சென்னையில் கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் திருச்செங்கோட்டில் கல்வியியலில் முதுகலைப் பட்டமும் மதுரை யாதவர் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றவர். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் சிறுகதைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றதால் மரபார்ந்த தமிழ் இலக்கியத்தின் மீது ஈடுபாடுகொண்டிருந்தார். பின்னர், எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துகளின் வழியாக நவீனத் தமிழ் இலக்கியத்தின் மீது விருப்பம் கொண்டு, விரிவாக வாசிக்கத் தொடங்கினார். தொடர்ந்து விமர்சனக் கட்டுரைகளை எழுதினார். 'சொல்புதிது’ சிற்றிதழ், 'மருதம்’ இணைய இதழ் ஆகியவற்றில் சில காலம் பணியாற்றினார். தொடர்ந்து சில இலக்கியக் கூட்டங்களை மதுரையில் நடத்தினார். தற்போது ‘தமிழ் விக்கி’யின் கல்வித்துறை சார்ந்த ஆசிரியர் குழுவில் உள்ளார்.
நவீனத் தமிழ்ப் படைப்புகளின் மீது மரபார்ந்த தமிழ் ரசனை சார்ந்த விமர்சனங்களை முன்வைத்தவர் என்ற முறையில் இவர் தமிழ் இலக்கியப் பெரும்பரப்பில் அடையாளம் காணப்படுகிறார். உலகின் மிகப் பெரிய நாவலான ‘வெண்முரசு’ குறித்த இவரின் நுட்பமான கட்டுரைகள் அனைத்தும் நவீனத் தமிழ் இலக்கிய வாசகர்களால் பெரிதும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
தற்போது ‘ராமபாணம்’ என்ற பொதுத்தலைப்பில் ராமாயணத்தை நவீனத் தமிழ் நடையில் தொடர் நாவல்களாக எழுதிவருகிறார்.
இவர் பெற்றுள்ள விருதுகள்
1. செந்தமிழ்த் திலகம் விருது – ஜூலை 23, 2011
2. இலக்கியச் சுடா் விருது - ஜூலை 21, 2012
3. எழுத்துலகத் தேனீ - 2022