ஒவ்வொரு கோயிலிலும் உள்ள இறைவனை மூர்த்தி என்பார்கள். தலங்களில் மூர்த்தி பல வகைகளில் எழுந்திருக்கும் காட்சிகளைக் காணலாம்.
சைவக்கோயில்களில் பெரும்பாலும் இறைவன் லிங்க உருவிலேயே இருக்கும். தில்லையிலே நடராஜராக, ஆனந்த கூத்தராக காட்சியளிக்கிறார்.
வைணவ சம்பிரதாயங்களில் பெருமாள் பரமபதத்தில் பரமாகவும், பாற்கடலில் வியூகமாகவும், இராம, கிருஷ்ண அவதாரங்களின் போது விபவமாகவும், மனிதர்களின் உள்ளத்தில் அந்தர்யாமியாகவும் வியாபிக்கிறார். நம்மைப் போன்ற மனிதர்கள் ஆராதிக்கவே அர்ச்சாவதாரம் எடுக்கிறார். ஆகவே ஆலயங்களில் நாம செய்யும் விக்கிரக ஆராதனை. இதைத்தான் "இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான் பன்னுதமிழ் மாறன் பயின்று” என்று மணவாள மாமுனிகள் சொன்னார்.
இம்மாதிரி இறைவன் எழுந்தருளியிருக்கும் இடங்களை தலமென்பர்.
இந்த தலங்களில் உள்ள மூர்த்திகளை வழிபட அகத்தூய்மை எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு அவசியமானது புறத்தூய்மை.
"புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையாற் காணப் படும்”
என்று அழகாக வள்ளுவர் பெருமான் சொன்னபடி புறத்தூய்மைக்கு நீர் அவசியம். இது கிடைக்க உதவுபவை நீர் நிலைகள் என்ற குளங்கள், கிணறுகள், ஏரிகள், நதிகள், கடல்.
ரிக்வேதம் நீர்தான் சக்தி என்கிறது: “ஜலங்களே! நான் நீண்ட காலம் உயிருடன் இருக்க, நீண்ட காலம் சூரியனைக் காண, எங்களின் எல்லா நோய்களுக்கும் ஒளஷதமாகி எங்கள் உடம்பினுள் செல். எந்த தவறுகளை செய்திருந்தாலும், எந்த துரோகம் செய்திருந்தாலும், உன் மீது பழிச்சொற்களைச் சுமத்தியிருந்தாலும், பொய்கள் பேசியிருந்தாலும் அவைகளை மன்னித்து எங்களுக்கு அருள்வாயாக.”
ஜலம் என்பது இறைவனின் ஆராதனையில் இன்றியமையாதது - விக்ரகங்களை பிரதிஷ்டை செய்யவே புனிதநீர் அவசியம். அன்றாட அபிஷேக ஆராதனைகளுக்கும் நீர் அவசியம். அத்துடன் நமது ஆலயங்கள் சமுதாய நோக்கங்களுக்கும் நிறுவப்பட்டவை. ஆன்மீக, சமூக, சமுதாய, சுகாதார, பொருளாதாரத் தேவைகள் அனைத்துக்கும் கோயிலே ஆதாரம். அதனாலேயே ஒவ்வொரு கோவிலுக்குள்ளேயோ, வெளியேயோ குளங்கள் நிறுவப்பட்டன.
பல சமயங்களில் இந்தக் கோவில்கள் நதிக்கரை ஓரமாக அமைந்திருக்கும். அந்தச் சமயங்களில் நதிகளே தீர்த்தங்களாகியிருக்கும். நதிகள் இருந்தாலும் அவை தென்னாட்டில் ஜீவநதிகளாய் இருப்பதில்லை. வறட்சியான காலங்களில் இறை ஆராதனைக்கு உ.தவ குளங்கள் வெட்டப்பட்டன. கிணறுகள் தோண்டப்பட்டன. மூர்த்தியின் அருளைப் பெற தேவர்களோ, முனிவர்களோ அமைத்த திருக்குளங்கள் அவர்களின் பெயராலேயே போற்றப்படுகின்றன.
இவை தவிர ஆலயத்து இறைவன் கோயிலுக்கு வருபவர்களுக்கு மட்டும் உரியவன் அல்ல. அவனுக்கு அப்பாலுக்கும் அப்பால் நிற்கின்றவனுக்கும் உரியவன். கோயிலுக்கு வரமுடியாத முதியவர்கள், உடல் ஊனமுற்றோர், வசதி வாய்ப்பு அற்றோர், என்று பலருக்கும் சொந்தம். அதற்காகத் தேர்பவனி வருதல், தெப்போற்சவம், தீர்த்த வாரி என்று பல வியாஜங்களை வைத்துக் கொண்டு 'கூரியர் சர்விஸ் போல’ அன்பர் இருக்குமிடங்களுக்கே சென்று காட்சி கொடுத்து அருள்புரிகிறான்.
அதனாலேயே மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றுமே விசேஷமாக உள்ள தலங்களைப் பெரிதும் கொண்டாடுகிறோம். வைணவமோ இவைகளை சப்த புண்ணியங்கள் என்கின்றன.
இந்தப் பெருமையால் தான் அறுபத்து நாயன்மார்களும், அறுபத்தி நான்கு திருவிளையாடல்களும், தச அவதாரங்களும் இங்கு நடைபெற்றன. அழகு தமிழில் பன்னிரு ஆழ்வார்களும் 108 திவ்ய தேசங்களைக் கண்டு மக்கள் உய்ய வழிவகுத்தார்கள்.
தமிழ்நாட்டில் 35000 கோயில்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயில்கள் தமிழக மக்களுடன் ஒன்றாகக் கலந்துவிட்டவை. இவைகள் பிரம்மாதி தேவர்களாலும், மகரிஷிகளாலும், மாமுனிவர்களாலும் கட்டப்பட்டவை. இவை நமக்காகக் கட்டப்பட்டவை.
மனிதன் ஒரு சமுதாய மிருகம் என்று அரிஸ்டாடில் சொன்னது போல, இந்தக் கோயில்கள் நமது சமுதாய சம்ரக்ஷணைகள், கலாசார பரிவர்த்தனைக்கு அடி கோலியவை. இவைகளில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றிலும் நிரவிய தலங்களைப் பார்க்கலாம்.
பல இடங்களில் தீர்த்தங்கள் தூர்ந்து போயிருக்கலாம். ஆனால் வேதங்கள் சொன்னது போல் நீர்தான் முதலில் தோன்றியது. அதுவும் 72 சதவிகிதத்திற்கு அதிகமாக உலகில் விரவியிருப்பது. அதனால் இந்தக் கோயில்களில் நமக்குக் கொடுக்கப்படும் தீர்த்தங்களை இறைவனையே உள் வாங்குவனவாகக் கருதி உய்வோமாக.
எம்.ஏ. (எகனாமிக்ஸ்), எம்.ஏ. (பாலிடிக்ஸ்), எம்.ஏ. (ஹிஸ்டரி), பி.எல். பட்டங்கள் பெற்று வேலைவாய்ப்புத்துறையில் இணை இயக்குனராய் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இலக்கியத்தின் மீது அதீத ஆர்வம் கல்லூரி நாட்கள் முதல் உண்டு. அலுவல் பணி காரணமாய் எழுத முடியாமல் போனாலும், மனைவி லட்சுமி ராஜரத்னத்தை எழுத ஊக்கப்படுத்தினார்.
மகள் ‘ராஜஸ்யாமளா’ பெயரில் 1970களில் இவர் எழுதிய சிறுகதைகள் இருமுறை கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசினை வென்றுள்ளன. இரண்டு சரித்திர நாவல்கள் எழுதியுள்ளார்.
பணி ஓய்வு பெற்ற பின், சொந்த பெயரில் நிறைய ஆன்மீக கட்டுரைகள் எழுதினார்.
மனைவி மற்றும் மகள் எழுத்துப் பணிக்கு பக்க பலமாய் இருந்தார். 2011ல் இறைவனடி சேர்ந்தார்.