அவன் ஏதோ சொல்லப் போகிறான் என்று அவள் காத்திருக்க, அவள் ஏதோ சொல்லப் போகிறாள் என்று அவன் காத்திருக்க, என்னதான் நடக்கிறது பார்ப்போமே என்று அங்கிருந்த செடிகளும், பூக்களும் காத்திருக்க, “இப்ப என்ன பண்ணிட்டு இருக்கே? நீயும் உங்கப்பா மாதிரி ஈஸிசேர்ல உட்கார்ந்து, வாழ்க்கையைப் பற்றி யோசிச்சிட்டு இருக்கியா? அல்லது உருப்படியா வேற ஏதாவது செய்யறியா?” என்றான் கதிர், அதிகாரத் தொனியில்.
இதைக் கேட்கவா இவ்வளவு நேரம்? வேறு ஏதோ சொல்லப் போகிறான் என்ற எதிர்ப்பார்ப்பு அவளுக்கு! பொசுக்கென்று சுருங்கியது முகம். “ஒரு ப்ரைவேட் கம்பெனியில நல்ல வேலை. நிறைவான சம்பளம். அவே ஃப்ரம் தி ஹோம் அட்மாஸ்ஃபியர். நீங்க எப்படி பிளாட் எடுத்துத் தங்கியிருந்தீங்களோ, அதே மாதிரி நானும் என்கூட வேலை பார்க்கற இருவரும், குட்டியா ஒரு வில்லா எடுத்துத் தங்கியிருக்கோம். சம் ஹௌ, ஐ ஹேட் ஸ்டேயிங் இன் எ ஹாஸ்டல். நிறைய கட்டுப்பாடுகள்.. விச் ஐ கேனாட் டாலரேட்.”
“ம்ம்.. சுதந்திரமா வாழ நினைக்கறவங்களுக்கு கட்டுப்பாடுகள் பிடிக்காது. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவனும், உனக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்காமல், சுதந்திரமா வாழவிடணும். அப்படியொரு வாழ்க்கைத் துணை அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இருவரும் சிறந்த புரிதலுடன் பல்லாண்டு காலம் மகிழ்வுடன் வாழுங்கள்.” என்று அவளையே பார்த்துக் கொண்டு கதிர் சொல்ல, கலக்கத்துடன் அவனை ஏறெடுத்துப் பார்த்தாள் ரூபா.
அவனிடம் ஏதோ சொல்லவேண்டும் என்று நாக்கு பரபரத்தது. ஆனாலும், சொல்ல இயலாமல் ரூபாவுக்குள் ஒரு தவிப்பு. எப்போதும் போல் எதையும் பிரதிபலிக்காத அவனது இறுகிய முகம். எவனையோ திருமணம் செய்துகொள்ள எனக்கு வாழ்த்துக்கள் சொல்கிறாயா கதிர்?
அப்படியானால், என்மீது உனக்குப் பழையபடி நாட்டமில்லையா? உன்மீது ‘அது’ இருக்கிறது, ‘இது’ இருக்கிறது என்று நீ சொன்னதெல்லாம், எதுவாகவும் இல்லாமல் போய்விட்டதா? நீ பழைய கதிராக காதலுடன் இருப்பாய் என்று நினைத்தது குற்றமானதே! இதயம் கலங்குவதில் அப்பெண்ணுக்கு அழுகை வந்துவிடுமோ?
இல்லை... அழக்கூடாது. அழுவது பலவீனம். அவன் பழைய கதிராக இருப்பான் என்று எதிர்பார்த்ததும் பலவீனம். “நான் கிளம்பறேன். புது இடம். ரொம்பவும் லேட்டாயிட்டா அக்காவும், மாமாவும் பதறுவாங்க.” திடீரென ஞானோதயம் வந்தது போல் அவசரமாகக் கிளம்பினாள்.
“புது இடம்-ன்னு புரியுது இல்ல. நீ எப்படி இங்கிருந்து தனியாகப் போவே? துணைக்கு நான் வர்றேன்.” என்றான் இறுக்கமான குரலில்.
“வரும்போது தனியாகத்தானே வந்தேன். போகும்போதும் அதே மாதிரிப் போயிடுவேன். இந்த உலகத்துல தனியா வாழப் பழகிக்கறது ஒருவகையில நல்லது.”
“பை..பை..கதிர். நைஸ் மீட்டிங் யூ. நாம மறுபடியும் சந்திக்கப் போறோமான்னு தெரியாது. ஆனாலும், அட்வான்ஸ் விஷஸ். ஃபார் யுவர் ஃபியூச்சர் லைஃப் அண்ட் ஃபார் எவரிதிங்.” பாடம் ஒப்பிப்பது போல் சொல்லிவிட்டு, அங்கிருந்து வேகமாகச் செல்ல முயன்றவளின் ஹைஹீல்ஸ் சதி செய்தது. ஒவ்வொரு முறையும் அவன் முன்னால் தடுமாற வேண்டுமா?
விழ இருந்தவளுக்கு இப்போதும் அவனுடைய கரங்களே அரண்.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.