“நேர்ல வந்தேன்னா தூக்கிப்போட்டு மிதிச்சிடுவேன். அவனைப் பேசச் சொல்லு.” என்று அபிமன்யு குரலை உயர்த்த, “என்னவோ முக்கியமா பேசணும் போல!” என்று சிணுங்கிக்கொண்டே சர்வேஸ்வரிடம் அலைபேசியைக் கொடுத்தாள் வெண்பா. “சொல்லு கரடி மச்சான்...” என்ற சர்வாவின் ஆரம்ப விளித்தலே அமர்க்களமாக இருக்க, அந்தப் பக்கம் அபிமன்யு என்ன வாசித்தான் என்று தெரியவில்லை.
“எதுக்கு கோவப்படுறே மச்சான்? உன் ஆளுன்னு சொல்லி வைச்சாக்கா, வீட்டுல இருக்கறவங்க இன்னும் கொஞ்சம் அக்கறையா பார்த்துப்பாங்க. ஃபிரெண்டுன்னு சொல்றதுக்கும், பியான்சின்னு சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கில்ல.” சிரித்தான் சர்வா. “யோவ்! எகத்தாளம் புடிச்ச மாப்பிள்ள... நீ ரியாவுக்குப் பாதுகாப்பு கொடுப்பேன்னு பார்த்தால், போன வேகத்துல நாரதர் கலகம் பண்ணி வெச்சிருக்கே! அம்மா திடீர்னு என்மேல கோபமா இருக்காங்க.” என்றான் அபிமன்யு. “நாரதர் கலகம் நன்மையில் முடியும். நம்பு மச்சான். பிரியாணி சாப்பிட விடு. நல்ல பசியோட இருக்கேன்.” என்று அலைபேசியை அணைத்த சர்வா, தன் எதிரே நின்றவளை ஒரு மார்க்கமாகப் பார்க்க, வெண்பா அவனுக்குச் செல்லமாகப் பழிப்புக் காட்டினாள். “அதென்ன... ஒருநேரம் பேசும்போது ‘அவன்’... இன்னொரு நேரம் பேசும்போது ‘அவர்’ன்னு மாறிமாறி வருது.” தன் இருவிரல்களுக்கு இடையே வைத்து, வெண்பாவின் உதடுகளோடு விளையாடினான் சர்வா.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.