பொதுவாக இப்போது படிப்பவர்கள் குறைந்து பார்ப்பவர்கள் அதிகரித்துவிட்ட ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதனால் பத்திரிகைகளும் அந்த நாள் போல் பல தொடர்கள், பல சிறுகதைகள் என்று வெளியிடுவதில்லை. ஒரு தொடர், ஒரு சிறுகதை என்று சுருங்கிவிட்டது. இதில் உணர்வு பூர்வமாக எழுதும் போது அதை வாசிக்க பெரிய ஒரு கூட்டம் இல்லை.
எல்லா காலகட்டங்களிலும் க்ரைம் எனப்படும் குற்றவியல் சார்ந்த மர்மக் கதைகளும், அமானஷ்யமான கதைகளும் ஒரு சாரரால் வெகுவாக வாசிக்கப்பட்டு வருகிறது. எனவே நானும் வெகு ஜனங்களுக்கான இதழ்களில் இந்த கலப்பில் எழுதும்போது எளிதாக வெற்றி கிடைத்துவிடுகிறது.
இத்தொடரிலும் அந்த வெற்றி எனக்கு உறுதியானது. வாராவாரம் வாசகர்களை தவிக்கச் செய்தேன்.
இந்த நாவலில் நிறைய ஆன்மிக விஷயங்களும் உள்ளன. நிச்சயமாக இதை வாசித்து முடித்த உடன் சித்தலிங்கபுரம் எங்கே உள்ளது என்று கேட்பீர்கள். சித்தேஸ்வரரையும் தேடத் தொடங்கிவிடுவீர்கள்.
தேடுங்கள்! அவர் அருள் கிடைத்தால் நல்லது தானே? இவ்வேளையில் தொடருக்கு ஓவியம் தீட்டிய திரு தமிழ்ச் செல்வத்துக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
பணிவன்புடன்,
இந்திரா சௌந்தர்ராஜன்