அவர்கள் எப்படிக் கெட்டுப் போகிறார்கள், அல்லது கெட்டுப் போவதில் இன்பம் அடைகிறார்கள், அந்தக் கேடான வாழ்வின் நுணுக்கங்கள் என்னென்ன, அதில் ஆசிரியனின் ஈடுபாடு எத்தகையது, வாசகர்களும் அவற்றைப் படித்து எத்தகைய கிளுகிளுப்புணர்ச்சியை அடையலாம் என்று சித்திரிக்கவே இத்தகைய கதைப் பொருளைச் செயற்கையாகக் கையாளும் எழுத்துக்கள் மலிந்து வருகிற இக்காலத்தில். இந்தச் சமூகத்துப் பெண்களின் தந்தை போன்ற மனப் பக்குவத்துடன் இவர்களது வாழ்வில் நேரும் அவலங்களைக் கண்டு சொல்லுகிற கலை எழுதுகிற புருஷோத்தமர்கள் தங்கள் எழுத்துக்களின் மூலம் சமூக ஆண்மைக்குப் புது வடிவம் தர முடியும் என்று நான் நம்புகிறேன். விபசாரமும், பலதார முறையும் இன்றியமையாத் தேவை என்று எழுதுகிற, பேசுகிற, வாழ்கிற நமது ஆண் சமூகத்தில் பெண் மக்களின் மெய்யான பிரச்னைகள் என்னவென்பதை நாம் ஆராய்தல் வேண்டும். விபசாரமும் பலதார முறையும் பெண் சமூகத்தினருக்கோ, ஒரு தனி மனிதப் பெண்ணுக்கோ தேவையானதே அல்ல. அதுகுறித்துப் பெண் மக்களின் கருத்துதான் முக்கியமே தவிர விபசாரத்தில் பிழைப்பு நடத்துகிற இந்தச் சமூகத்துக்கு அடிமை ஆண்களின் கருத்துக்கள் அவர்கள் என்னதான் சமூகத்தை ஆட்டிப் படைக்கிற சக்தி பெற்றிருந்த தலைவர்களாக, கலைஞர்களாக, எழுத்தாளர்களாக இருப்பினும் விபசாரம் ஒரு சமூகத் தேவை என்று கருத்துத் தெரிவிக்கிற கசடர்களின் வாதங்களை நமது அறிவார்ந்த மக்கள் ஒரு பொருட்டாகக் கருதலாகாது.
விபசாரமும், பெண் கொடுமையும் இந்தச் சுரண்டல் பொருளாதார அமைப்பில் நேர்கிற இயல்பேயான மனிதச் சீரழிவாகும். இதனை அங்கீகரிப்பதன் மூலமும் இதனை அவசியம் என்று வாதிப்பதன் மூலமும் இத்தீமையை வளர்க்கிற சமூக மூடத்தனம் நாளும் பெருகி வருகிறது. எதிர்காலச் சமூகம் தனியுடைமையையும், பெண்ணடிமைத் தனத்தையும் முற்றாக ஒழிக்கிறபோது இந்த விபசாரம் எனும் தீமையும் இறுதியாக ஒழிந்தே போகும். ஆனால் அதுவரை நமது சமூகத்தில் மரபார்ந்த இளைஞர்கள் குறிப்பாக அறிவார்ந்த பெண்கள் இத்தீமையை எதிர்த்துப் போராடித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுகிறார்கள் என்று காட்டுவதே சமூக யதார்த்தம்.
நமது பெண் மக்கள் தம்மை அடிமைகளாக எண்ணிக் கொள்கிற மோகத்திலிருந்து விடுபட்டுக் கொண்டு வருகிறார்கள். இக்காலத்தில் ஏற்பட்டுள்ள பெண் கல்வியும், பொருளாதார ஊன்றுகோலும் அதற்கு உதவ வேண்டும். ‘பெண்களறிவை வளர்த்தால் வையம் பேதைமை யற்றிடும்’ என்பதே நமது நம்பிக்கை, அத்தகு அறிவு வளர்ந்த இரண்டு பெண்களைப்பற்றிய இரண்டு கதைகள் இவை.வாசகர்களுக்கும் நன்றி.
த. ஜெயகாந்தன்