உலகம், மனித வாழ்க்கை - பொதுவாக - முன்னேறிக் கொண்டிருக்கிறது. வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதில் நமக்குள் அபிப்பிராய பேதம் உண்டா? அநேகமாக இல்லை. சில ‘ஸினிக்'குகள். தனி வாழ்வில் ஏற்பட்ட கசப்பில் மனம் முறிந்து உலகை - இரண்டு விரல்களுக்கிடையே தாங்களே அமைத்துக் கொண்ட சாளரத்தின் வழியாக ஒரு குறிப்பிட்ட இடத்தை வெறித்து நோக்கிக் கற்பனைத் துயருக்கு ஆளாகும் சில நிரந்தர நோயாளிகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். உலகம் முன்னேறி வருகிறது; மனிதன் வளர்கிறான் என்பதை...
இங்கே மனிதன் என்று கூறும்போது நாம் குறிப்பிடுவது, வளர்கின்ற உலகப் பொது மனிதனைத் தான்.
இதை ஏற்றுக் கொள்பவர்கள், வளர்ச்சியை விரும்புபவர்கள், இந்த வளர்ச்சியை ஏற்றுக் கொள்ள மறுப்போரை எதிர்ப்பவர்கள், இந்த வளர்ச்சிக்குத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளுபவர்கள்; தன்னினம் - தன் சமூகம், தனது சமுதாயம் - இந்த வளர்ச்சிக்குத் தகுந்த நிலை பெறவில்லையே என்று புழுங்குபவர்கள், இந்த வளர்ச்சிக்குகந்தவர்களாக அவர்கள் மாறாதிருக்கும் சூழ்நிலையை ஆராய்பவர்கள், அந்தத் தடைகளை அறிந்து மற்றவர்களுக்கு அறிவிப்பவர்கள், உலகவளர்ச்சியில் பின்தங்கி இருக்கும் ஒரு சமூகத்திலேயே வளர்ச்சிக்குரிய அந்த அம்சம் சிறுபொறியாக இயற்கையிலேயே கனன்று கொண்டிருப்பதைக் காண மறுக்காதவர்களும், காண்பவர்களும் முற்போக்காளர் ஆவர்.
மனிதனுக்கு மனிதன் இருக்கும் நேசம், உள நெகிழ்வு, வாழ்க்கையில் மனிதனுக்கு இருக்கும் பற்று, ஒருவரின் துயர் போக்க மற்றொரு துயரப்படும் ஜீவன் செய்யும் தியாகம் - இன்னபிற அடிப்படை மனித உணர்வுகள் பொதுவான வளர்ச்சிக்கான ஆதார உண்மைகள். இவை எல்லாம் சேர்ந்தே - உலக வளர்ச்சிகேற்ப உளவளர்ச்சியும், அறிவுத் தெளிவும் பெறும் முற்போக்குச் சிந்தனையால் - ஒரு முற்போக்காளர் உருவாக வழி சமைக்கிறது.
அந்த முற்போக்காளன் ஆஸ்திகனாகவோ நாஸ்திகனாகவோ, ஒரு அரசியல் கட்சியில் நேரிடைப் பங்கு பெறுபவனாகவோ இல்லாதவனாகவோ இருக்கலாம். ஆனால், நிகழ்காலம் பார்த்துப் பரிகசிக்கத் தக்க, பழைய செத்தொழிந்த தத்துவங்களின் பாதுகாவலனாக இருக்க முடியாது.
உதாரணத்துக்கு, பாரதி என்கிற ஆஸ்திகனைச் சொல்லலாம். அவன், காலத்தின் வளர்ச்சியை மனிதனின் மேம்பாட்டை என்றும் மறுத்ததில்லை. அவன் ஆஸ்திகன். ஒரு சோஷலிச சகாப்தத்தை அவன் கிருதயுகம் என்றே குறிப்பிடுவான். அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் விளைவிக்கும் ஒரு சகாப்தத்தை, 'பொய்க்கும் கலி'யென்றே சொல்வான். ஆஸ்திகனும் நாஸ்திகனும் வார்த்தைகளில் பேதப் படுவார்கள்; அர்த்தத்தில் அல்ல, இருவரும் முற்போக்காளராயிருந்தால்.
என் சிந்தனைகள் முற்போக்கானவை என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனக்கு முற்போக்கு என்று தோன்றுவதால் மட்டும் நான் அந்த முடிவுக்கு வரவில்லை. உலகம் எதை முற்போக்கு என்று நிர்ணயிக்கப் போகிறதோ, நிர்ணயிக்கிறதோ அதை வைத்தே சொல்கிறேன் வாழ்க்கையை. இந்த நூற்றாண்டில் வாழும் மனிதர்களைப் பற்றி மிகவும் பொறுப்புணர்ச்சியோடு சிந்திக்க வேண்டியது இந்த நூற்றாண்டு - மனிதனுக்கு இன்றியமையாதது ஆகின்றது. இதற்கு அடிப்படையான ஒரு தத்துவம் தேவை. அதைப் பயின்று - வாழ்க்கையிலிருந்தும் அறிந்து, அதன் மூலம் சிந்தனை செய்து - செயல்படுவது ஒரு முற்போக்குவாதியின் கடமையாகிறது.
மனித குணங்களை ஆராய்பவனே, மனித உணர்வுகளை மதிப்பவனே, மனித சாதனைகளை நம்புகிறவனாகிறான். மனிதனின் குறைபாடுகளையுங் கூட அவனே அறிகிறான். வாழ்க்கையை உருவாக்குகிறதும், நிறைவைத் தருகிறதும் எது என்கிற விஷயம் சூழ்நிலைக்கும், வாழ்கின்ற சமூகத்துக்கும் ஏற்ப மாறும். அந்த மாற்றத்தால் விளையும் ஒரு குறிப்பிட்ட மனிதனின் ஒரு குறிப்பிட்ட செயல், நான் கடைப் பிடிக்கும் கொள்கைக்குப் புறம்பு என்பதை உத்தேசித்து அதை நான் மறுக்காமல், அந்த மனிதனின் அந்தச் செயலில் பொதிந்துள்ள மனித தர்மத்தைக் காண்பதையே கடமையாகக் கொள்கிறேன்.
அப்பொழுது சில முற்போக்காளர்கள் நான் வழி தவறிச் செல்வதாக விமர்சிக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று கூறுவேன்! இது கலை விவகாரம்! சட்டங்களும் அறநூல்களுந்தான் ஒருவேளை உணர்ச்சியை மீறியதாக இருக்கலாம். கலை என்பது என்றுமே உணர்ச்சிக்கு உட்பட்டது. அந்த அளவில், எனது பாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கு எனது கொள்கைகளைத் தளர்த்தி (அவை கலை விஷயத்தில் தளர்ந்து கொடுக்கும், தன்மையுடையன.) நான் அவற்றிலே, வளர்ச்சிக்கும், அன்புக்கும் மனிதாபிமானத்துக்கும் உரிய ஓர் உன்னத மனித சொரூபத்தையே தரிசிக்கிறேன்.
- த. ஜெயகாந்தன்