இந்த நாடகத்தை நீங்க படிக்கிறதுக்கு முன்னால் சில வரிகள்... என் மனசுல படறதை உங்ககிட்ட சொல்லணும்னு ஆசைப்படறேன். அண்ணைக்கும் சரி... இன்னைக்கும் சரி... மக்கள் மத்தியில நாடக இலக்கியத்துக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. இருபது வருஷமா நாடகம் போட்டுட்டு இருக்கிற நான் இதை அனுபவத்துல பாக்கறேன். ஒரு தயாரிப்பாளரா, எழுத்தாளரா, நடிகரா, இயக்குநரா நான் பல வேலைகள் செய்யறதால கஷ்டங்கள் நிறைய இருந்தாலும், நாம போடற நகைச்சுவை நாடகத்தைப் பார்த்து இரசிகர்கள் சிரிக்கும்போது அந்த கஷ்டங்களெல்லாம் பறந்து போகுது. ஒரு தரம் பவுடர் பூசி நடிச்ச எந்த ஒரு நடிகனும், அந்த ஆசையை வாழ்க்கையில் மறக்கறது கஷ்டம். பிரசவ வைராக்கியம், ஸ்மசான வைராக்கியம்னு சொல்ற மாதிரி நாடக வைராக்கியத்தைக்கூட சொல்லலாம். சே... நாய் படாதபாடு படறோம்... இனிமே நாடகத்துக்கு போகக்கூடாதுண்ணு நினைப்போம். ஆனா யாராவது மேடையில் நடிக்கிறதை பார்த்தா உடனே நாமும் பவுடர் போடணும்னு ஆசை வந்துரும். மற்ற எழுத்தாளர்கள் தன்னோட படைப்பு ஜனங்க மத்தியில எப்படி எடுபடுதுன்னு தெரிய கொஞ்சம் காத்திருக்கணும். ஆனா நாடக எழுத்தாளனுக்கு அப்பவே ரிசல்ட் தெரிஞ்சுரும். அதுவும் நகைச்சுவை நாடகம் போடறவங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். ஏன்னா சோக நாடகம், சீர்திருத்த கருத்துக்களைச் சொல்ற நாடகங்களைப் போடற போது பாக்கற ஜனங்க போசாமத்தான் உட்கார்ந்திருப்பாங்க. சில இடத்துல கை தட்டலாம். கை தட்டாமலும் ரசிக்கலாம். ஆனா நகைச்சுவை நாடகம்னு சொல்லிட்டு போட்டா, அது உண்மையாகவே நகைச்சுவையா இருந்தா யாரும் சிரிக்காம இருக்க முடியாது. அதனால எங்க பாணியில ரிஸ்க் அதிகம். வெறும் நகைச்சுவையோடு நிற்காம கொஞ்சம் சமுதாயத்துக்குத் தேவையான கருத்துகளும் இருந்தா அதுக்கு ஒரு தனி மதிப்புதான். அப்படித்தான் என்னோட நாடகங்கள் இருக்கிறதா பார்த்தவங்க சொன்னாங்க. ஆனா... என்னைப் பொறுத்தவரைக்கும் என் எழுத்துக்கள் மேல இன்னும் முழு திருப்தி கிடைச்சதில்லே... ஒவ்வொரு நாடகம் எழுதும் போதும் இன்னும் நல்லா எழுதணும்னுதான் நினைப்பேன். பார்த்தவங்க பாராட்டும் போதுதான் நான் ஒரு எழுத்தாளன்ங்கிற நினைப்பே வரும். எத்தனையோ நாடகங்கள் நேர்மையைப் பற்றியும், ஊழல் இல்லாத வாழ்க்கையோட அவசியத்தைப் பற்றியும் வந்துகிட்டு இருக்கு. படிக்கிறதுக்கும், பாக்கறதுக்கும் நல்லா இருக்கே தவிர, அவைகளை நாம கடைபிடிக்கிறமாங்கறது சந்தேகம்தான்.... அப்படிக் கடைபிடிச்சிருந்தா நம்ம நாடு இன்னும் எவ்வளவோ முன்னேறியிருக்கும். அதனால் ஒரு நாடகம் மக்களைத் திருத்தும், அல்லது கெடுக்கும் அப்படிங்கிறதை என்னால ஒத்துக்க முடியலே... ஒண்ணு செய்யலாம்... மனசு விட்டு சிரிக்க வைக்கலாம். சிரிச்சா இரத்த ஓட்டத்துக்கு நல்லதுன்னு விஞ்ஞானப்பூர்வமா / நிரூபிச்சிருக்காங்க... அதுனால் நகைச்சுவை நாடகங்கள் உடல் நலத்திற்கு நல்லதுங்கற முடிவுல நாம அதை ஏத்துக்கலாம். இப்பவெல்லாம் மேடையில் சீரியசான நாடகங்களே குறைஞ்சு போச்சு. லைட்டா ஒரு கருவை எடுத்துட்டு, மக்களைச் சிரிக்க வைக்கத்தான் எல்லாருமே விரும்பறாங்க. எவ்வளவோ பிரச்சினைகளை வாழ்க்கையில் அனுபவிக்கிற ஜனங்களும், மனம் விட்டுச் சிரிச்சிட்டுப் போகத்தான் வறாங்க. அவங்களுக்குத் தெரியாத எந்தக் கருத்தையும் நாம சொல்லிட முடியாதுங்கறதுதான் என்னோட முடிவு. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை ஆகிய மூன்று வழிகளிலும் வெளியான பத்து நாடகங்கள் இந்தப் புத்தகத்துல வந்திருக்கு. இவைகளை நீங்க படிச்சி மகிழலாம்... மேடையில நடிச்சும் மத்தவங்களை மகிழ்விக்கலாம். நல்லிதயம் படைத்த தமிழ் வாசகர்களிடையே என் முதல் நூலை நம்பிக்கையுடன் படைக்கிறேன். வளரும் இந்த நாடக எழுத்தாளனை ஊக்குவித்து, வாழ்த்துங்கள் என வேண்டுகிறேன்.