'முஸ்லீம்களின் பாகிஸ்தான் கோரிக்கையைக் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டு இந்தியாவில் தேசிய சர்க்கார் ஏற்படுவதைச் சாத்தியமாக்க வேண்டும்' என்று ராஜாஜி 1942 -ல் சொன்னபோது அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ராஜாஜி கூறியதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலும் வேண்டுமென்றே திரித்துக் கூறியும் அவர் மீது துவேஷத்தைப் பலர் வளர்த்தார்கள். ஏறத்தாழ அவரைத் தேசத்துரோகி என்று கூறுமளவுக்குக்கூடப் போய்விட்டார்கள்.
இந்தப் பலமான எதிர்ப்பைச் சமாளிக்க, பதிலடி கொடுக்க, அப்போது மாதம் இரு முறையாக வெளி வந்து கொண்டிருந்த கல்கி பத்திரிகை “கல்கி”க்குப் போதுமானதாக இல்லை. சிறு செய்தித்தாள் வடிவில் துணை கல்கி ஒன்றினை வாரம் இருமுறை வெளியீடாகப் பிரசுரித்தார். இதில் ராஜாஜி ஆதரவுப் பிரசாரம் தவிர, உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் நிலவரங்கள், யுத்தச் செய்திகள் முதலியன வெளிவந்தன. இதன் விற்பனையை மேலும் அதிகரிக்க மகுடபதி என்ற நாவலைத் தொடங்கினார். துணை நின்ற துணைக் கல்கிக்கு இந்தத் தொடர்கதை துணை நின்றது.
சுதந்திரப் போர்வீரர் “கல்கி” தேசிய எழுச்சியின் அடிப்படையில் தோற்றுவித்தவைதாம் கல்கி பத்திரிகையும் துணைக் கல்கியும். எனவே தேசபக்தன் ஒருவனையே கதாநாயகனாகக் கொண்டு “மகுடபதி” என்ற தலைப்பில் அவர் கதை புனைந்ததில் வியப்பேதுமில்லை. கல்கிக்கே உரித்தான நடை, கவிதை சொல்லும் உத்திகள், மர்மங்கள், திடீர் திருப்பங்கள் எல்லாம் அமையப் பெற்று வாசகர்களைப் பரபரப்பில் ஆழ்த்தி, படித்து முடிக்கும்வரை கீழேவைக்க இயலாத ஆர்வத்தை ஊட்டுகிறது நாவல்.