கதையின் ஆரம்பமே நன்றாயில்லையே? முடிவு முன்னுரையிலேயே வந்துவிடுகிறது. “இதற்குள் முன்னுக்குப் பின் முரண் வேறு” என்று நீங்கள் எண்ணலாம். ஆம், வினை கதைக்கு உண்மை வரலாற்றுக்கும் உள்ள வேற்றுமை அதுதான். கதையென்றால் அமைப்பு ஒழுங்காகவே இருக்கும் நிகழ்ச்சிகள் முன்னுக்குப் பின் முரண் இன்றி ஒன்றன்பின் ஒன்றாய் வரும், ஆனால் வாழ்க்கையின் உண்மை சம்பவங்களை அவ்வளவு பொருத்தமாகக் கூற முடியுமா? மேலும் இவ்விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கப் புகுந்தாலே என் மனம் குழம்பி விடுகிறது. எனவே இச் சரித்திரத்திலுள்ள குறைகளுக்காக என்னை மன்னித்துவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.