நம்மில் எத்தனை பேருக்குப் பல்லக்கு ஏற வாய்த்திருக்கிறது? வெகு அபூர்வமாய் ஒரு சிலருக்கு...! இன்றைய சமுதாயத்திலுள்ள யாருக்கும் அந்த அனுபவம் இராது என்றுதான் தோன்றுகிறது. இரண்டு அல்லது நால்வரின் வலிய தோள்களில் சுமக்கப்படும் சற்று விநோத பயணம் அதுவெனில்... வேறு ஒருவரின் கற்பனையில் சாய்ந்து, சவாரி செய்து அறியாத பிரதேசங்களை எட்டி மகிழ்வதும் ஒருவகை பல்லக்குப் பயணம்தான் என்று எனக்குத் தோன்றியது. ஒரு கதாசிரியரின் கற்பனை கட்டிய தூளியில் ஏறி அமர்ந்து, ஆடி அசைந்தபடி கற்பனை லோகத்திற்குள் நுழைந்து அங்கு சுற்றிவரும் சுக அனுபவம்... வாசிப்பில் ருசி கண்ட பலரும் அடிக்கடி தேடிச் சுவைக்கும் சுகம் அது... அலுக்கவே அலுக்காத பழக்கம். புத்தகங்களைத் தேடி, பிரித்து அதற்குள் மூழ்கிப் போகும் ஆனந்தம். நம் சுவைக்கேற்ப, தேவைக்கேற்ப வெவ்வேறு தோள்களில் ஏறி தந்து அமர்ந்து சுற்றிவரும் ஆர்வம். கதாசிரியரோடு நம் கற்பனையையும் பிணைத்து உணரும் இன்பம். பெரும்பாலும் 90-களில் வெவ்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த என் சிறுகதைகள் இவை. சில பரிசு பெற்றுத் தந்தவை. என் கவனிப்பை, கற்பனையைக் கொண்டு பின்னப்பட்ட சின்னக் கதைகள் - அதைப் பிறரிடம் பகிரும் உந்துதலால் எழுதப்பட்டவை. இவற்றைப் பிரசுரித்து என்னை ஊக்கிய பத்திரிகை ஆசிரியர்களுக்கு நன்றி. வாசித்து சிலாகித்த, சிநேகம் பாராட்டின வாசகர்களுக்கு நன்றி. எனக்குள் இப்படியான கதைகளை, அதைக் கொண்டு பிறருக்குப் பல்லக்கு அமைக்கும் ஆற்றலை அளித்த என் இறைவனுக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் பல்லக்குப் பயணம் உங்களுக்கு இன்பமானதாய் அமையட்டும். பயணம் முடிந்து நிகழ்வுலகில் இறங்கும்போது உங்களின் மனம் குதூகலத்துடன், நற்குறிக்கோளுடன் மலர்ந்திருக்கட்டும். மிகுந்த அன்புடன், காஞ்சனா ஜெயதிலகர்