இந்த ஏழு வள்ளல்களின் வரலாறுகளைத் தொடர்ச்சியாகச் சொல்லும் நூல் எதும் இல்லையாயினும், சங்கநூல்களில் கிடைக்கும் குறிப்புக்களைக் கொண்டு ஒருவாறு அவற்றை உணர்ந்து கொள்ளலாம். சில வள்ளல்களின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகள் புலனாகின்றன; வேறு சிலர் வாழ்க்கையின் விரிவு அந்த அளவுக்குத் தெரியவில்லை.
பழைய நூல்களில் உள்ள குறிப்புக்களைக் கொண்டு ஒருவாறு நிகழ்ச்சிகளைத் தொடர்புபடுத்தி, ஏழு வள்ளல்களின் வரலாறுகளையும் இந்தச் சிறுநூலில் எழுதியிருக்கிறேன். தமிழ்நாட்டுச் சிறுவர்களும் சிறுமியரும் இவற்றைப் படித்துப் பயன் பெறக்கூடும் என்பது என் எண்ணம்.