கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் இருந்தேன். அந்த ஒரு நாளில் பல இடங்களைப் பார்த்தேன். அந்த யாத்திரைக்குப் பின் மூன்று முறை இலங்கைக்குப் போய் வந்திருக்கிறேன். யாழ்ப்பாணப் பகுதிகளையும் அதைச் சார்ந்த தீவுகளையும் பார்த்தேன். யாழ்ப்பாணத்துக் கென்றே விரிந்த வரலாறு உண்டு. இலங்கையின் வடக்கே பல தீவுகள் சூழ அரசி போல இலங்குவது யாழ்ப்பாணம், தமிழ் மக்களே வாழ்ந்துவரும் பகுதி, தமிழ் மொழியையும் கலைகளையும் பாதுகாத்து விளங்கும் இடம். அங்கு வாழும் தமிழர்களுடைய தமிழன்பையும் சிவ பக்தியையும் யார் கண்டாலும் வியக்காமல், இருக்கமாட்டார்கள். தமிழ் காட்டில் உள்ள கோயில்களைப் போன்ற விரிவான அமைப்பையுடைய ஆலயங்கள் அங்கே இராவிட்டாலும் பல தலங்கள் இருக்கின்றன.