பூமி நாதனின் உடன்பிறந்த சகோதரிகள் ஆறு பேர்களையும் பெற்று அத்தனை பளுவையும் அவன் தலையில் சுமத்திய தாயின் பக்கம் பரிந்து பேசும் நிலைக்கு மாறாக கடைசி தங்கை விஜி தன் அண்ணி கல்பகத்துடன் இரண்டறக் கலந்தவள். பூமிநாதன் ஒவ்வொரு தங்கையாகக் கல்யாணம் முடித்து கடைசித் தங்கை விஜிக்கு முப்பத்தியொரு வயதாகியும் திருமணம் குதிராத நிலையில் பூமிநாதனின் பெண் பிரதிபா திருமணத்திற்குத் தயார் நிலையில் இருக்கிறாள்.
கர்னல் கோபாலின் இரண்டாவது மகன் சியாமின் போக்கு அறிந்து அவனின் மூத்த அண்ணன் இராம்குமார் பல திட்டங்கள் போட்டு அவனைக் கிடுக்கி போடுவதும் கடைசியில் அவன் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு ஆபத்தான நிலையில் நர்ஸிங்ஹோமில் சேர்க்கப்படுவ தும் பிறகு வீடு வருவதும் இதே சியாமை நர்ஸிங்ஹோம் சென்று விபரமறிந்து விஜி தானே திருமணம் செய்து கொள்ள விரும்புவதும் இதையறிந்த பூமி நாதன் தம்பதிகள் வியப்பிலாழ்வதும், 'அண்ணனுக்குப் பெண் திருமண வயதடைந்து தன்னால் அது தடைபடாமலிருக்கவே இந்தத் தீர்மானம்' என்று விஜி கூறுவதும் ஓர் குடும்பத்தில் நடக்கும் இயற்கையான சம்பவமாகவே தோன்றச் செய்கிறது.