Veril pazhuththa pala: வேரில் பழுத்த பலா

·
· Mukil E Publishing And Solutions Private Limited
3.2
5 reviews
Ebook
160
Pages
Ratings and reviews aren’t verified  Learn More

About this ebook

 என்னுரை (ஏப்ரல் 1989)


சக்தியுள்ள படைப்புகளாகக் கருதப்படுபவைகளுக்கு சாகித்ய அகாதமிப் பரிசுகள் கொடுக்கப்படுவது வழக்கம். இந்த நாவலுக்கு பரிசு கிடைத்த பிறகுதான், எனது சக்தியும், இந்த நாவலின் சக்தியும் எனக்கே புரிந்தன. இந்தப் பரிசு கிடைத்ததும், ஒரு கோவிலில், எல்லா வேளைப் பூஜைகளும் ஒரே சமயத்தில் ஒட்டு மொத்தமாக நடப்பது போல-அப்படி தொடர்ந்து மூன்று மணிநேரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இடையிடையே மந்திரம் போல் 'உங்களின் அன்பு-ஆசீர்வாதம் என்று நான் சொல்லி முடிக்கவும், ஆலயமணிபோல் டெலிபோன் மணி மீண்டும் ஒலிக்கும். அதோடு, தமிழகத்தில் இருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான வாழ்த்துக் கடிதங்களும், நான் இன்னும் சிறப்பாக எழுத வேண்டுமென்ற விமர்சனக் கடிதங்களும் குவிந்தன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், இலக்கிய வீதி உட்பட பல இலக்கிய அமைப்புகள், பல்வேறு பாராட்டுக் கூட்டங்களை நடத்தி, என்னைக் கெளரவித்தன. புது தில்லியில், தில்லித் தமிழ்ச் சங்கம், பாவேந்தர் பாசறை உட்பட பல அமைப்புகள் பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகள் நல்கின. தமிழில் சாகித்திய அகாதமிப் பரிசு பெற்ற எந்த எழுத்தாளருக்கும் இல்லாத அளவிற்கு, எனக்குப் பாராட்டு நிகழ்ச்சிகள் கொடுக்கப்பட்டன.


இந்தப் பாராட்டுகளுக்குக் காரணம், இந்த நாவலின் இயல்பு மட்டுமல்ல; இதில் உள்ள இலக்கிய நயங்களுக்காகவும் அல்ல; மாறாக, தாழ்வுற்று, வறுமைப்பட்டு, பிற்படுத்தப்பட்டு, அவலமுறும் அடித்தள மக்களைப் பற்றி எழுதுகிற ஒருவனுக்கு, ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றுதான், அத்தனை தோழர்களும், இந்தப் பரிசு தங்களுக்குக் கிடைத்தது போல் மகிழ்ச்சியுற்றனர். என்றாலும் இந்த எழுத்துக்குக் கிடைத்த வெற்றி, இந்த எழுத்தில் வரும் ஏழைகளுக்கு வெற்றியாக மாறும்போதுதான் எனது படைப்புகள் பரிபூரணமாகும் என்று எண்ணுகிறேன்.


புதுதில்லி வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில், சிறந்த எழுத்தாளரும், தில்லி தொலைக்காட்சி செய்திப் பிரிவின் தலைமைச் செய்தி ஆசிரியருமான பிரபு செல்வராஜ், நான், இலக்கியத்திற்கு என்று வைத்துள்ள இலக்கணங்களை உடைத்துவிட்டு, புது இலக்கணத்தை உருவாக்கி இருப்பதாகக் குறப்பிட்டார். உண்மைதான். எழுத்து வியாபாரிகளிடம் இருந்தும் இலக்கியத் தான்தோன்றிகளிடம் இருந்தும் மாறுபட்டு, எழுதுவதாகவே நினைக்கிறேன் நமது மக்களின் ஆசைகளையும், நிராசைகளையும், யதார்த்தக் கண்ணோட்டத்தோடு படைக்கிறேன்.


எனது அரசு அனுபவம் வேரில் பழுத்த பலா என்ற குறுநாவலாகவும், நான், சென்னை நகரில் கண்ட கட்டிடத் தொழிலாளர்களின் துன்பங்கள், துயரங்கள், ஒருநாள் போதுமா என்று குறுநாவலாகவும், இந்தப் படைப்பில் உள்ளடங்கி உள்ளன. எனக்குத் தெரிந்தமட்டில், "சாகித்திய அக்காதெமி'ப் பரிசு பெற்ற நாவல்களில், இது ஒன்றுதான், எந்த இடத்திலும் யதார்த்தக் குறைவு இல்லாமல் வந்துள்ள படைப்பு என்று எண்ணுகிறேன். இதனாலேயே திருஷ்டி பரிகாரம் போல, பாராட்டுகளுக்கு மத்தியில், சில 'இலக்கிய" வெத்துவேட்டுச் சத்தங்களும் ஒலித்தன. என்றாலும் ஒரு படைப்பில் ஒருத்தியைக் கொண்டு வந்து, அவள் கற்பு எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்று ஒரு சஸ்பென்சை ஏற்படுத்தி, அந்த சஸ்பென்சின் இடையே, ஒரு பிரச்சினையைச் சொல்லிக் கொண்டே போவது எனது வேலை அல்ல. இதனால் எந்த மக்களைப் பற்றிச் சித்தரிக்கிறோமோ, அவர்கள் பக்கம் கவனம் போகாது. ஆகையால்தான் எனது படைப்புக்கள் எதிலும், செக்ஸ் உப்பை கரைப்பதில்லை. இந்த ஒரு தனித்துவமும், இந்த சமூகத்தை மனதார நேசிக்கும் நேயமும், என் படைப்புகளுக்கு ஒரு அங்கீகாரத்தைக் கொடுக்கிறது என்று நம்புகிறேன்.


அலுவலகங்களில் அவமானப்பட்டு, ஆயாசப்பட்டு, திறமையை முளையிலேயே கிள்ளி எறிய விட்டுவிட்டு, தவிக்கும் அன்னம் போன்ற படித்த ஏழைப் பெண்களைப் பற்றி எழுதப்பட்ட நாவல் இது. அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும், முற்படுத்தப்பட்டோருக்கும் இடையே இலை மறைவு காய் மறைவாக நடக்கும் போராட்டத்தைச் சித்தரிக்கும் படைப்பு இது. இந்த நாவல் ஒரு சில கல்லூரிகளில் பாட நூலாக வைக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். எனது பல படைப்புகள் பல்கலைக் கழகங்களில் பாட நூல்களாக இருந்தாலும், இந்த படைப்பு பாட நூலாக இருப்பதில் அதிக மகிழ்ச்சி ஏற்படுகிறது. காரணம், நாளை, அரசு ஊழியர்களாகவும் அதிகாரிகளாகவும் விளங்கப் போகிற மாணவ சமுதாயம், அரசு அலுவலகங்களிலுள்ள நல்லது கெட்டதுகளை சிந்தித்து, சீர்தூக்கி, இந்தச் சமுதாயத்திற்கு நலன் விளைவிக்கும் வகையில், தங்களைத் தாங்களே இப்போதே தயார்படுத்திக் கொள்ள, இந்த நாவல் உதவும்.


'வேரில் பழுத்த பலா'வை மாத நாவலாக வெளியிட்டு “கனமான நாவல்களுக்காக காலம் அவரை கெளரவப்படுத்தும்" என்று தீர்க்க தரிசனமாக எழுதிய என் இனிய நண்பரும், வார்த்தைச் சித்தருமான வலம்புரி ஜான் அவர்களுக்கு என் நன்றி


நான் எழுதிய முன்னுரையை நானே ஒரு வாசகன் போல் படித்தபோது நல்லதும் கெட் டதுமான நினைவுகள் மேலோங்கிப் பொங்குகின்றன.


நாளை யும், கிழமையையும் துல்லியமாகக் குறிப்பிட முடியாவிட்டாலும், இன்னும் எனக்கு நன்றாகவே நினைவு இருக்கிறது. 1992 ஆம் ஆண்டு. டிசம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் இருந்து இருபதுக்குள் இருக்கும்.


அந்தக் காலத்தில், சென்னை வானொலி நிலையத்தின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய நான், சைதாப்பேட்டையில் மாலையில் நடைபெற்ற நரிக்குறவர்கள் சந்திப்பில் பங்கேற்றுவிட்டு, அவசர அவசரமாக வானொலி நிலையத்திற்குத் திரும்பினேன். அப்போது, எனது அலுவலக சகாக்கள் கங்ராஜுலேஷன் சார் என்றார்கள். அந்தச் சமயத்தில் எனக்கு பதவி உயர்வு வரப்போவதாக ஒரு பேச்சு அடிபட்டது. உடனே அவர்களிடம் எந்த இடத்துலப்பா என்னப் போட்டுருக்காங்க என்று கேட்டேன். உடனே சகாக்கள், எனக்கு வேரில் பழுத்த பலா என்ற நாவலுக்காக சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்து இருப்பதாகக் கூறி, செய்தி நிறுவனங்களான யு.என்.ஐ., பி.டி.ஐ, கட்டுகளைக் காண்பித்தார்கள். விருதுக்கு முன்னே


இந்த விருது பற்றிய அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, எனது இனிய நண்பரும், சிறந்த எழுத்தாளரும், சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் முன்னாள் இயக்குநருமான ஏ. நடராசன் அவர்கள், எனக்கு இந்த விருது கிடைக்கலாம் என்றார். உடனே நான் நம்பள மாதிரி ஆட்களுக்கு எல்லாம் கொடுக்கமாட்டாங்க அண்ணாச்சி என்றேன். சில நாட்களுக்குப் பிறகு எழுத்தாளர் மாலன் அவர்கள், "சாகித்திய அக்காதெமி'யின் பரிசுப் பட்டியல் நாவல்களில் ஒன்றாக வேரில் பழுத்த பலா தன்னுடைய பரிந்துரைக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார். அப்போதும், அவர் சொன்னதை கேட்டுக் கொண்டேனே தவிர, நீங்கதான் பார்த்துச் செய்யனும் என்று ஒரு வார்த்தைகூட கேட்டதில்லை. விருதுக்குப் பின்னே...


இப்படிப்பட்ட சூழலில், நானோ, எனது நாவலோ பரிசுக்குரியதல்ல என்று சில சிற்றிதழ்கள் எழுதியதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. காரணம் என்னைப் பற்றியும் என் எழுத்தைப் 


பற்றியும் எனக்கு நன்றாகவே தெரியும். அதே சமயம் நானே விருதை சாமர்த்தியமாக வாங்கிக் கொண்டதாக, அப்போதைய ஆரம்ப கால எழுத்தாளரும், இப்போதைய சிறந்த படைப்பாளியுமான ஜெயமோகன் இந்தியா டுடே பத்திரிகையில் எழுதியபோது, நான் துடித்துப்போனேன்.


இதுபோதாது என்பதுபோல், "கணையாழி", எனக்கு விருது வழங்கியதை, "இலக்கியத்தில் இடஒதுக்கீடு வந்துவிட்டது" என்று வர்ணித்தது. (இந்தக் "கணையாழி'யின் ஆசிரியரான கஸ்தூரிரங்கன், தன்னை ஆசிரியராகக் கொண்ட "தினமணிக் கதிரில்", ஒரு சிறந்த இலக்கியவாதிக்கு பரிசு கிடைத்து இருக்கிறது என்று கேள்வி பதிவில் குறிப்பிட்டார்) இந்த "கணையாழி" வர்ணனை, மிகப் பெரிய இலக்கியப் பரபரப்பை ஏற்படுத்தி, என்னையும், நான் சார்ந்திருக்கும் முற்போக்கு மற்றும் தேசிய முழக்க இயக்கங்களையும் ஆவேசப்படுத்தியது. மனிதநேயத் தலைவர் ஜி.கே. மூப்பனார் அவர்கள் கூட, இந்த வர்ணனையால் மிகவும் வருந்தினார். இதற்காகவே ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், 1960-களில் நான் எழுதிவந்த தேசிய முழக்கப் பத்திரிகை சகாக்கள் தில்லித் தமிழ்ச் சங்கம், அகில இந்திய எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகள் என்னைப் பாராட்டி மகிழ்ந்தன. மகிழ்வித்தன. விசித்திரங்கள்...


இந்த விருது பற்றிய விவகாரங்களில் பல விசித்திரங்கள் அடங்கியுள்ளன. முதலாவதாக, அரசு அலுவலகங்களில் இட ஒதுக்கீடால் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களை மையமாகக் கொண்ட இந்த நாவலுக்கான விருதினை, "இட ஒதுக்கீடு' என்று வர்ணித்ததுதான். இதில் உள்ளடங்கிய "ஒருநாள் போதுமா?" என்ற குறுநாவல் விமர்சிக்கப்படாதது, இந்த விசித்திரத்தில் ஒரு துணை விசித்திரம்.


இரண்டாவது விசித்திரமாக, இந்த நாவலுக்கான விருதைக் கண்டித்து 'சாகித்திய அக்காதெமி'க்குத் தந்தி கொடுக்க வேண்டுமென்று புலம்பிய நெல்லைக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரை, புதுவையில் ஒரு கருத்தரங்கில் சந்தித்தேன். இந்தப் படைப்பு இரண்டு குறுநாவல்களைக் கொண்டது என்பதுகூட, அந்தப் பேராசிரியப் புலிக்குத் தெரியாது. பிற்படுத்தப்பட்ட எழுத்தாளர்களைச் சாடினால்தான் இலக்கிய மேட்டுக்குடியின் அங்கீகாரம் கிடைக்குமென்று தப்பாகவோ, சரியாகவோ நினைத்த அந்த அப்பாவிக்காக நான் அனுதாபப்பட்டேன்


மூன்றாவது விசித்திரமாக, "சாகித்திய அக்காதெமி'யின் இலக்கிய இதழான லிட்ரேச்சர் என்ற ஆங்கிலப் பத்திரிகையில், நானே கூகம் அளவிற்கு வானாளவப் புகழ்ந்து தள்ளிய ஒரு கூலிக்காரத் திறனாய்வாளர் தமிழ் இதழ்களில் இந்த நாவலைக் கடுமையாகக் கண்டித்தார். "கணையாழி"யிலும் கண்டித்தார். நானே அவர் எழுதியதைக் "கணையாழி'யில் வெளியிட்டு இவரது முகமே ஒரு மூடி என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டியதாயிற்று.


நான்காவதாக, எந்த தலித் மக்களுக்காக நான் எழுதினேனோ, அவர்களில் ஒரு சிறுபான்மையினர் நடத்திய பத்திரிகை ஒன்று, என்னை தாறுமாறாக விமர்சித்தது. என்றாலும், "கணையாழி'யின் இந்த வர்ணனைதான், "தலித் இலக்கியம் தமிழகத்தில் தனித்து இயங்குவதற்கு ஒரு காரணம்" என்று மனித நேயக் கவிஞர் பழமலய் அவர்கள், என்னிடம் தெரிவித்தது ஆறுதலாக இருந்தது. விசித்திராதி விசித்திரம்


என்றாலும், இந்த விசித்திரங்களை எல்லாம் மூடி மறைக்கும் அளவிற்கு ஒரு பெரிய இலக்கிய விசித்திரம், இந்த பத்தாண்டு கால இடைவேளையில் என்னைப் பொறுத்த அளவில் நிகழ்ந்திருக்கிறது. 'சுபமங்களா' பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் சமுத்திரத்தின் மீதும், சமுத்திரத்தின் இலக்கிய முயற்சிகள் மீதும் எனக்கு மரியாதை உண்டு" என்று கஸ்தூரிரங்கன் தெரிவித்தார். நாளடைவில், இதே 'கணையாழி” என்னை, சிறுகதை அனுப்பும்படி கேட்டுக் கொண்டது. ஒரிரும் கதைகளும் வெளியாயின. இப்போது, எனது படைப்புக்களை இலக்கியத்தரமாகக் கருதி விமர்சிக்கிறது.


இதேபோல் என்னைச் சாடிய எழுத்தாளர் ஜெயமோகனை, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் விஜயா பதிப்பக வேலாயுதம் அவர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நான் எடுத்த எடுப்பிலேயே, அவர் என்னை சாகித்திய அக்காதெமி விருதை "வாங்கியதாக எழுதியதை சுட்டிக்காட்டினேன். எவரையும், எதற்கும் வேண்டுவது எனது ரத்தத்தில் இல்லாதது என்றும், அவருக்குச் சுருங்கக் கூறி விளங்க வைத்தேன். உடனே, எந்த தயக்கமும் இல்லாமல் அந்த இளைஞரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அப்படி எழுதும்படி சிலர் தூண்டிவிட்டதாகவும், அதற்குப்பிறகு, என் இயல்பைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டதாகவும், மீண்டும் பெருந்தன்மையாக வருத்தம் தெரிவித்தார்.


ஜெயமோகனின் வருத்தம், எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இதோடு விடாமல், ஜெயமோகன், என்னிடம் வருத்தம் தெரிவித்து ஒரு நீண்ட கடிதம் எழுதினார். 'முயலுக்கு மூன்றே கால் என்ற வீம்புத்தனம் இல்லாமலும், சிலரைப் போல் தான் எழுதியது சரிதான் என்பது மாதிரி வேசித்தனமாகப் புன்னகைக்காமலும்


ஜெயமோகன் நேர்மையாக நடந்து கொண்டார். இதனால்தான் இப்போது ஜெயமோகனின் இலக்கிய வளர்ச்சி நாம் நிமிர்ந்து பார்க்கும் அளவிற்குப் போகிறது.


அப்போது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய அந்த தலித் பத்திரிகை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் நடந்த உலகளாவிய தமிழ் படைப்பாளிகள் மாநாட்டிற்கு, கோணங்கி, சு. சமுத்திரம் போன்றவர்களை ஏன் கூப்பிடவில்லை என்று மாநாட்டு அமைப்பாளர்களிடம் துண்டு பிரசுரம் மூலமாக குற்றம் கண்டது. ஆக, வெந்த புண்ணில் பாய்ந்த வேலே, பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல் ஆயிற்று.


ஆக மொத்தத்தில் நல்லவன் செய்வதை விட நாள் செய்யும் என்ற பழமொழி என்வரையில் உண்மையாகி, எனக்கும் ஒரு இலக்கிய முதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.


வேரில் பழுத்த பலாவையும், ஒருநாள் போதுமாவையும் ஆய்வேடுகள் மூலம் அருமையாக அடையாளம் காட்டிய க. ரேவதி, ப. தேன்மொழி அவர்களுக்கும் எனது நன்றி. அந்தக் காலத்தில் இந்தப் படைப்பைப் படித்துவிட்டு உடனடியாக கடிதம் எழுதிய வாசகர்களுக்கும் என் நன்றி உரித்தாகும்.




சு. சமுத்திரம்




Ratings and reviews

3.2
5 reviews
Pragadeeswaran Kabali
July 2, 2024
Problems of daily wage worker's are picturised in a heart touching form. Hat's off to the writer.
Did you find this helpful?

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.