காட்சி கலர் அசையும் குரலொலிகள் உருவங்களின் மிகை வடிவம் போன்றவை அவர்களது நேரம் உண்ணுவனவே அன்றி வேறு பயன் இல்லை. ஏனென்றால் அவற்றை மீட்பு செய்து நினைவு கூற மாட்டார்கள். அவற்றிலிருந்து எந்தக்கருத்தும் சிறுவர் சிறுமிகள் எடுத்துக்கொள்வதில்லை. அதனாலேயே முத்து காமிக்ஸ், கோகுலம் போன்ற சிறுவர் இதழ்கள் அன்றைக்கும் இன்றைக்கும் வரவேற்பு பெறுகின்றன. ஏன்? புத்தக வாசிப்பு மூலம் சொந்த மனக் காட்சிகளை ஏற்படுத்திகொள்ள சாத்தியம் தருகின்றன என்பதே.
“எட்டுகால் பூச்சிக்கு பத்துகால்” சிறுகதைத் தொகுப்பு சிறுவர் சிறுமியர் விரும்பும் கதைகளால் நிரம்பியுள்ளது.
கணையாழியில் சுஜாதா மூலம் 1993 முதலாக அறியப்படும் பா. சத்தியமோகன்(23.06.1964), திருச்சி மாவட்டம் துறை மங்கலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். நெய்வேலியில் மின்பிரிவில் தலைமைப் பொறிமேலாளர். அனுபவித்து நேர்வதைச் சொற்களால் துழாவி பிரபஞ்சம் முழுவதையும் தேடுபவராகவும்; தேடலின் வழியே பிரபஞ்சமே கவிதையாய் நேர்வதாகவும் பரிமாற்றம் செய்து கொள்ளும் மன உலகப் பயணம் இவருடையது.
வாழ்வின் அழுத்தமான ஒவ்வொரு கணத்திலும் ஒரு நடசத்திரத்தைத் தேடி எடுப்பவராகவும்; சீரான நிகழ்வுகள் நடுவே அபத்தம் ஒளிந்திருப்பதையும் தனக்கே உரிய மொழி லாவகத்தோடு பகிர்பவர். சங்ககால மொழி துவங்கி நவீன கவிதை இயங்குமுறை வழியே தனது முப்பதாண்டு கவிதை வாழ்வை 15 தொகுப்புகள் மூலமாக தமிழ் சமூகம் அறியத் தந்தவர். சமகால நவீனக் கவிதைகளில் ஞானகூத்தன், எஸ். வைத்தீஸ்வரன், தேவதேவன், ஆத்மாஜீவ் வழியே, கவிதைமூலம் பேருண்மை மீது வரைந்த மொழிச் சித்திரங்களாக இவரது கவிதைகளை வாசகன் கவனிக்க முடியும்.