வாசகர்களுக்கு வணக்கம்!
வானவில் பூங்கா அது என்ன இது முன்னுரை! சலிப்பாய் இருக்கிறது! எல்லா கடிதங்களிலும் "அன்புள்ள... என்று தொடங்கி ….நிற்க..." என்பது வரை செயற்கை உணர்வுகள் போல இந்த முன்னுரைகளும்... ஆகிவிட்டது!
"இதில் என்ன எழுதியிருக்கிறேன் என்றால்....' என்று எழுத வேண்டி வரும்!
வாங்கி விட்டவருக்கும் வாசித்து விட்டவருக்கும் இதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தெரியாதா?
தெரியாமல் போய்விட இது என்ன அகழ்வாராய்ச்சிக் குறிப்புகளா?
முன்னுரை என்பது எழுத்தாளன் – வாசகனுக்கு தடக்... தடக்... ரயில் பாலமாக இருக்கலாம்! அந்தப் பாலம் இந்தப் புத்தகத்திற்கு அவசியமில்லை!
ஏனெனில்… இஸங்களில் இது பாமர இஸம்! இஸ்டுகளில் நான் மக்களிஸ்ட்! நேராக புத்தகத்திற்குள் செல்லலாம்!
நேரம் மிச்சம்! நன்றிகளுடன்
பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.
கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.
இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
பா. விஜய் இதுவரைக்கும் இலக்கியப் படைப்புகளாக கவிதை, நாவல், சரித்திர புதினங்கள், கட்டுரை படைப்புகள் என 47 படைப்புகளை எழுதியுள்ளார் உள்ளார் இவருடைய நூல்களில் இருந்து சுமார் 350 மாணவர்கள் எம்பில் ஆய்வும் 60க்கும் மேற்பட்டோர் பிஹெச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது