அன்புள்ள உங்களுக்கு... வணக்கம். 1988 ல் ஆனந்த விகடன் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த நாவல் ‘கனவுகள் இலவசம்.’நிறைய வாசகர்களை கவர்ந்த நாவல் இது. குறிப்பாக வாசகிகளை! காரணம்... அது அவர்களைப் பற்றிய கதை. சுயமாய் சிந்திக்கிற, சுதந்திர உணர்வுகள் கொண்ட பத்மினி என்கிற பெண்ணின்... திருமணத்திற்கு முன்பும், பின்புமான பிரச்சினைகளை அலசுகிற கதை. பல வருடங்கள் கழித்து இப்போது ஒருமுறை படித்துப் பார்க்கும் போதும் எங்கும் எதுவும் முரண்படவில்லை, என்பது ஆச்சரியமாக இருக்கிறது. விஞ்ஞான ரீதியான வளர்ச்சி காரணமாக தொடர்பு சாதனங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் நாட்டில் பெருகியிருக்கின்றன. ஆனால் பத்மினி போன்ற மனப்புழுக்கம் உள்ள பெண்களை இப்போதும் நிறைய சந்திக்க முடிகிறது. உரத்து சிந்தித்தால் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்றே தோன்றுகிறது. இப்படி தோன்ற 1988ஐ விட இப்போது குடும்ப நீதிமன்றங்களும், விவாகரத்து வழக்குகளும் பெருகியிருப்பது ஒரு வெளிப்படையான சான்று. நமது நாட்டின் கலாச்சாரத்தில் உள்ள நமது திருமண அமைப்பில் எனக்கு கேள்விகள் ஏதுமில்லை. ஆணாகட்டும், பெண்ணாகட்டும் - சிறப்பான விதிவிலக்கு காரணங்கள் இருந்தாலொழிய... திருமணம் அனைவருக்கும் அவசியம்தான். திருமணம் ஒரு மனிதனை முழுமையாக்குகிறது. பக்குவப்படுத்துகிறது. வாழ்வின் பல அர்த்தங்களை கற்பிக்கின்றது. நமது வம்சத்தின் தொடர்ச்சியை சமுதாயத்திற்கு விட்டுச் செல்கிற கடமையை பூர்த்தி செய்ய வாய்ப்பளிக்கிறது. உடலின் நியாயமான தேவைகளுக்கு முறையான வழி அமைத்துக் கொடுக்கிறது. பாசம், அன்பு இவற்றுக்கு பல கோணங்களில் அனுபவ விளக்கம் அளிக்கிறது. இப்படிப்பட்ட சிறப்பான திருமண பந்தம் சிறப்பாக அமைந்தால் தம்பதியரின் வாழ்வில் மகிழ்ச்சி. மாறாக அமைந்தால் சோகம்.‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’என்றார் கண்ணதாசன்! மனைவி அமைவது மட்டும்தானா? கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரமே. கணவனை தேர்வு செய்வதில் ஒரு பெண்ணுக்கு இந்த சமுதாயம் வழிவழியாக வழங்கி வரும் சுதந்திரம் சற்றுக் குறைவுதான். பல திருமணங்கள் உறவு தொடர்வதற்காகவும் (சொந்தம் விட்டுப் போயிடக் கூடாதுன்னு மாமன் பொண்ணை கட்றதுதான் எங்கள்ல வழக்கம்), தந்தையின் சீர் செய்யும் திறனின் அடிப்படையிலும் (‘இதுக்கு மேல படிச்ச மாப்பிள்ளையா, வசதியான இடமா பாத்தா என்னால அவங்க கேக்கற அளவுக்கு செய்ய முடியாதேம்மா’) அமைகின்றன. மனப்பொருத்தம் இருக்கிறதா என்பதைவிட ஜாதகப் பொருத்தம் இருக்கிறதா என்பதே இன்னும் கவனிக்கப்படுகிறது. பெண் பார்க்கும் சம்பிரதாயத்தின் போது ஏதோ சில இடங்களில் தான் பையனும், பெண்ணும் தனிமையில் சந்தித்துப் பேசுகிறார்கள். அந்த பதட்டமான சூழ்நிலையில், சில நிமிடங்களில் ஒருவரை ஒருவர் எவ்வளவு தூரம் உணரமுடியும்? புரிந்துக்கொள்ள முடியும்? ஆக... நமது திருமணங்களில் பெரும்பாலும்‘நமக்கு அமையும் கணவன் நல்லவனாகத்தான் இருப்பான், நம்மை நன்றாக வைத்துக் கொள்வான்’என்று முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் தான் ஒரு பெண் மணமாலை ஏற்கிறாள். கழுத்தில் தாலி ஏறிய அடுத்த வினாடி தனது அத்தனை உறவுகளையும் துறந்து அவன் பின்னால் வருகிறாள். அப்படி தன் முழு வாழ்க்கையையும் நம்பிக்கையோடு ஒரு ஆண்மகனிடம் ஒப்படைத்து திருமண பந்தத்தில் நுழைகிற அத்தனை பெண்களின் மீதும் எனக்கு அளவுகடந்த மரியாதை உண்டு. அவர்களின் மனதில் சுமந்து வரும் நூறு வண்ணக் கனவுகளும் சிதைக்கப்படாமல் காப்பாற்றப்பட வேண்டுமே, நிறைவேற்றப்பட வேண்டுமே என்று பதைப்புடன் கூடிய அக்கறையும் உண்டு. இந்த பதைப்பும் அக்கறையுமே என்னை இந்த நாவலை எழுதச் செய்தன. கதையின் நாயகி பத்மினிக்கும் நூறு கனவுகள் உண்டு. அவளுக்கு அமைகிற நாயகன் எப்படி, அவளுடைய கனவுகளுக்கு என்ன நேர்கின்றன என்பதை படித்து அறியுங்கள். இந்த நாவலை வெளியிட்ட ஆனந்த விகடன் நிறுவனத்திற்கும் இந்த நாவலை சென்னை தொலைக்காட்சியில் 18 வார தொடராக தயாரித்து ஒளிபரப்பிய‘செவன்த் சேனல்’நிறுவனத்திற்கும் - இந்த நாவலை தங்கள் மாணவிகளுக்கு பாடநூலாக வைக்க தேர்வு செய்த திருச்சி, சீதாலட்சுமி ராமசாமி பெண்கள் கல்லூரி நிர்வாகத்திற்கும்.