நாவல்களை எழுதும்போது ஏதாவதொரு புதிய உத்தியைக் கையாள வேண்டுமென்கிற துடிப்பு என்னுள் இருந்துகொண்டே வருகிறது. வர்ணனைகள் கொண்ட விவரனைகளை விடுத்து உரையாடல்களை மட்டுமே கொண்டு பல வசன நாவல்களை எழுதியிருக்கிறேன். அதேப்போல வெறும் கடிதங்களை மட்டுமே அடுக்கி சில நாவல்களை எழுதியிருக்கிறேன். ஒரு நாவலில் கதாநாயகி முதல் அத்தியாயத்தில் தன் தோழிக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதுவாள். இரண்டாவது அத்தியாத்தில் அந்தக் கடிதத்தை அனுப்ப வேண்டாமென்று தீர்மானித்து கிழித்துப் போட்டு விடுவாள். அதோடு நாவல் முடிந்துவிடும். இன்னொரு நாவலில் காதலனும், காதலியும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கடிதம் எழுதிக் கொள்வார்கள். கடைசி கடிதம் கிளைமாக்சாக அமையும். மற்றொரு நாவலில் முதலில் கதையின் கிளைமாக்சை வழங்கிவிட்டு பிறகுதான் கதையை துவங்கியிருக்கிறேன்.