சொந்தங்களைக் காக்க இறந்தும் சஞ்சலத்துடன் சுற்றுகின்ற ஆன்மாக்களோடு அவர்களுக்கு உதவியாய் அசுவம் ஏறி அகிலம் காக்க வருகின்றான் அருஞ்சுனையை காத்த ஐயனார்...
பலியைத் தேடி பாவி சுற்றிக் கொண்டிருக்கும் சமயத்தில் பாவியிடம் இருந்து பாவையைக் காக்க படைத்தவனின் அருளோடு பயணம் செய்கிறார்கள் கதை மாந்தர்கள்.. இப்படி தெய்வீகமும் மாந்திரீகமும் கடுமையாகப் போட்டியிட்டுக் கொள்ள முடிவில் என்ன நேர்ந்தது... தர்மம் வென்றதா? அதர்மம் அழிந்ததா? தெரிந்து கொள்ள கதையோடு பயணியுங்கள்....`
கணினியில் ஆயிரம் மொழிகள் படித்தாலும் ஆதி மொழியாம் எம் தமிழே என்னைக் கர்வம் கொள்ள வைக்கிறது. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதியின் அந்த இறுமாப்பை நானும் கொஞ்சம் களவாடி எழுதுகோலை விட்டுவிடாது எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை வேறு திக்கை நோக்கி என்னை இழுத்துச் சென்றாலும் உடன் வருவது என் தமிழன்னை என்ற உவகையில் பயணிக்கிறேன்.
அற்புதங்கள் அள்ளித் தரும் இப்பயணத்தில் தமிழன்னை மட்டும் அல்லாது தமிழ் சொல்லிக் கொடுத்த என் அன்னை தந்தை உயிராய் வந்த உடன்பிறந்தோர், உறவாய் வந்த காதலன் அவன் நகலாய் உதித்த மகவு என சுற்றத்தோடு நகர்கிறேன். என் முயற்சிக்கு உறுதுணையாய் இருப்பது அவர்கள் தானே. அந்த நம்பிக்கையால் தான் மூன்று ஆண்டு கால எழுத்துப் பயணம் சாத்தியமானது.
கவிதை மட்டும் எழுதிக் கொண்டு கல்லுாரியில் சுற்றிக் கொண்டிருந்த காலத்தில் கதை எழுதுவாய் என்று யாராவது சொல்லியிருந்தால் நான் சிரித்துக் கடந்திருப்பேன். ஆனால் இன்று அது உண்மையில் நடந்திருக்கிறது..
மெதுவாக நடக்கும்..நல்லது மெதுவாகத்தான் நடக்கும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருங்கள்.. என்ற நம்மாழ்வார் ஐயாவின் கூற்றுப்படி இப்போது வாழ்வில் நல்ல விசயங்கள் நடக்க ஆரம்பித்திருக்கிறது.. அது இன்னும் மென்மேலும் பெருகி வளர வேண்டும் என்று இந்த அண்டத்திலும் எனக்குள்ளும் உறைந்திருக்கும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்...
வாழ்க வளமுடன்...
என்றும் அன்புடன்
பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்