'சும்மா கொஞ்ச நேரம்' என்ற தலைப்பில் துணுக்குகள் தயாரித்தேன். நூல் நிலையத்திற்குப் போய், பழைய தமிழ்ப் புத்தகங்களைப் புரட்டிப் புரட்டி, வாழ்க்கை வரலாறு, கவிதை, நாட்டுப் பாடல், மருத்துவம் முதலிய பல துறைகளைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தேன். கல்கத்தாவில் இருந்த சில நண்பர்கள் அங்கிருந்து ஆங்கிலப் பத்திரிகைகளை அனுப்பினார்கள். ஏறத்தாழ இரண்டு வருட காலம் வெளியான அந்தத் துணுக்குகள்தான் 'அறிவுக்கு ஆயிரம் வாசல்' என்ற தலைப்பில் இங்கே வந்துள்ளது.
இப்புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பட்டிமன்றப் பேச்சாளர்கள் நிறையப் பயன்படுத்திக் கொள்வார்கள். எனக்கு அதில் மகிழ்ச்சியே. ஆனால், ரா.கி. ரங்கராஜன் தொகுத்த 'அறிவுக்கு ஆயிரம் வாசல்' புத்தகத்தில் இந்த விஷயம் காணப்படுகிறது என்ற தகவலையும் அவர்கள் சொன்னால் மேலும் மகிழ்ச்சி அடைவேன்.
- ரா. கி. ரங்கராஜன்
ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.
- கல்கி
'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.
- சுஜாதா