எனவே, மாஸ்டர்ஜியுடன் அதிகம் பொழுதை கழிப்பேன். பல விஷயங்களை கூறுவார். தினமணியில் பணிபுரிந்த ஜெ பி ரோட்ரிகஸ் என்பவரை பற்றியும், அவர் சத்தியமூர்த்திக்கு எவ்வளவு நெருங்கியவர் என்பதையும் கூறுவார். எனவே அந்த ரோட்ரிகஸை பற்றி நிறையவே விஷயங்களை சேகரித்து வைத்திருந்தேன்.
ஒரு நாள் ஜெயலலிதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது அந்த ரொட்ரிகஸ் தான் நடிகர் சந்திரபாபுவின் அப்பா என்று கூறினார். அதன் பிறகு சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய தகவல்களை சேகரிக்க துவங்கினேன். மாஸ்டர்ஜி கூறிய விவரங்கள், பெங்களூரில் இருந்தபோது தான் சந்திரபாபுவுடன் பழகிய காலத்தை பற்றி ஜெயலலிதா கூறிய தகவல்கள், போலீஸ்காரன் மகளில் சந்திரபாபுவுக்கு வசனம் எழுதிய எனது தந்தை சித்ராலயா கோபு கூறிய தகவல்கள், எம்ஜிஆர்க்கு மிகவும் நெருங்கிய ஒருவர் கூறிய தகவல்கள், பத்திரிக்கையாளனாக நான் சேகரித்த தகவல்கள், எம். எஸ் வியின் நெருங்கிய உறவினர் கூறிய தகவல்கள், இன்னும் சந்திரபாபுவின் ரசிகர்கள் பலர் என்னிடம் தெரிவித்த தகவல்கள் அனைத்தையும் சேகரித்து உங்களுக்கு தொடராக அளிக்கிறேன். காதலிக்க நேரமில்லை நகைச்சுவையான, ஜாலியான தொடராக இருந்திருக்கலாம்! இந்த தொடர் சற்று சோகத்தையும், நகைச்சுவையையும் கலந்தே கொடுக்கும். எழுதுபவர்கள் நீர் மாதிரி. Water takes the shape of the container! எழுத்தாளரும் எழுதும் விஷயத்தில் உள்ள உணர்வுகளையே பிரதிபலிப்பார்கள்! இதோ தொடங்குகிறேன்...
டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.
சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.
குமுதத்தில் தற்போது மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதி வருகிறார்.
காலச்சக்கரம் நரசிம்மா அவர்களை [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்