ஐந்து! 1. சிலப்பதிகாரம்; 2. மணிமேகலை; 3. வளையாபதி; 4. குண்டலகேசி; 5. சீவக சிந்தாமணி.
இவற்றுள், சிலம்பும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப் பேசப்படுகின்றன. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்து நிற்கின்றது.
என் உள்ளத்தில் நிறைந்து நிற்பது சிறப்புயர் சீவக சிந்தாமணியே! ஆம்... அது காணக் கிடைக்காத நன்மணி!!
முதல் நான்கு காப்பியங்களும் நாடகங்களாக நடிக்கப்பட்டன. வெண்திரை ஓவியங்களாகவும் திரையிடப்பட்டன. பாமர மக்களும் உணர்ந்தனர்.
என்ன காரணத்தாலோ சீவக சிந்தாமணிக் காப்பியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தாமல் இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். பல காரணங்கள் கூறினும் சமயக் காழ்ப்புணர்வே முதல் காரணம், என்றும் எண்ணத் தோன்றுகிறது. இரண்டாவது காரணம், காமரசம் ததும்பியது எனப் புலவர் பெருமக்களே நினைத்துவிட்டதுதான். இரண்டு நோக்கங்களுமே தவறானவை என்பதே என் கருத்து.
சீவக சிந்தாமணிப் பெருங்காப்பியம் ஒரு வீரகாவியமே! எங்குதானில்லை காதல்? சிற்றின்பம் பற்றிக் கூறாத காப்பியம் எது? காப்பியங்கள் அனைத்திலும் ஆண் பெண் இருபாலாருமே வருணிக்கப்படுகின்றனர். யார்தான் இன்பரசத்தைப் பருகாமல்விட்டு வைத்தனர்? உண்மை நிலை இவ்வாறிருக்க, சிந்தாமணியை மட்டும் ஒதுக்கிவைத்தது தவறு என்று என் மனத்தில் தோன்றுகிறது. என் மனக் கருத்தை இந்த என் ஒப்பாய்வு நூலில் விளக்குகிறேன். சான்றோர்கள் சிந்திக்கவேண்டும். இஃதே என் வேணவா.