தரம் ஒன்றே நிரந்தரம் ஜெயம் ஒன்றே எந்திரம் பலம் ஒன்றே மந்திரம் சோடா பாட்டிலைத் திறந்தவுடன் அது நொங்கும் நுரையுமாய் பொங்கி வரும். ஆனால், சிறிது நேரத்தில் பாட்டிலில் பாதி அளவில் வெறும் தண்ணீராய் அது நிற்கும். இப்படி சோடா பாட்டில் உற்சாகம் கொண்டவர்கள் பலர் தங்கள் வெற்றியை அடைய முடியாமல் எதிர்பாராத விதமாய்க் கிடைத்த உயர் பதவியையும் விட்டுவிடுகிறார்கள். இவர்களுக்காகத் தான் ஜெயதாரிணி அறக்கட்டளையின் சேவை தேவையாகிறது. தனியாக ஒன்று மட்டும் எந்தச் சிறந்த பலனையும் அளிப்பதில்லை. இவ்வுலகில் இனாமாக எதுவும் கிடைப்பதில்லை. சிந்தனையும் உழைப்பும் சேரும் போதுதான் அங்கே ஒருமித்த பலன்கள் கிடைக்கின்றன. வெற்றிக்கு உழைப்புதான் குறுக்கு வழி என திடமாக நம்ப வேண்டும். அப்போதுதான் நேரடிச் சிந்தனை உதயமாகும். அதில் கிடைப்பதுதான் வெற்றி. எனவே வேறுவழிச் சிந்தனைகளை மறந்து விடுங்கள். இந்த 'சிந்தனைத் தூறல்கள்' யாரையும் கெடுக்காத ஒரு உயர்ந்த படைப்பு. இச்சிறு நூலினை எழுதிய பாவை கண்ணதாசன் இளவயதிலேயே தமிழ்ச் சோலைக்குள் புகும் வாய்ப்பைப் பெற்ற பாக்கியசாலி என்பதை நூலினைப் படிக்கும் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்குள் இது போன்ற பயனுள்ள நூலினை எழுத வேண்டும் என்ற சிந்தனை வளரும்.