இந்த ஒரே ஒரு நாவலின் மூலமே ஹெச். ஜி. வெல்ஸின் எழுத்துத் திறமையை நாம் உணர முடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அவர் எழுதி வெளியானது இந்த நாவல். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது நிச்சயமாக அது விஞ்ஞான அறிவு குறைவான ஒரு காலகட்டமே என்பதை உணர முடியும். கண்ணுக்குத் தெரியாத மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் இதில் யதார்த்தமாகச் சித்திரித்திருக்கிறார் வெல்ஸ். இதை நாவலின் முதல் பாராவிலேயே நாம் உணரலாம். விறுவிறுப்பு, சுவாரஸ்யம், திருப்பம் ஆகியவற்றை இந்த 21- ஆம் நூற்றாண்டில் வாசிக்கும்போதும் நம்மால் உணர முடிவது வெல்ஸின் வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக இப்போதும் கூட, இதை சாத்தியமற்றது என்று ஒதுக்கித் தள்ள முடியாத அளவுக்கு இந்த நாவலைக் கட்டமைத்திருக்கிறார் அவர். அதற்கும் மேலாக, மனிதன் பெற முடியாத அற்புதமான சக்தி ஒன்றை பெற்றால், அதை எப்படி பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று உணர்த்துவதாகவும் கொள்ளலாம்.