பூலித்தேவனின் கோட்டை பார்த்ததும் எனக்கு மெய்சிலிர்த்தது. சென்னை திரும்பியதும் ஒரே மூச்சாக உட்கார்ந்து 'சுதந்திர வேங்கை'யூரின் இதர அத்தியாயங்களை எழுதி முடித்தேன், பத்துப் பதினைந்து ஆண்டுக்கால் முயற்சிகளுக்குப் பின் 'சுதந்திர வேங்கை' இதோ முழுமையாக உங்கள் கைகளில்.
'தமிழ் வீரன் பூலித்தேவன்' என்னும் நூல் 1980-ஆம் ஆண்டு என் கைகளில் கிடைத்தது. துர்க்காதாஸ் எஸ்.கே, பப்புவாமி எழுதிய அந்த நூலை வாசித்தபோதே பூலித்தேவன் என் இதய அரியணையில் ஏறி அமர்ந்து கொண்டுவிட்டார். அந்த நூல் வெளியிட்ட தமிழறிஞர்
புலியூர்க் கேசிகன், என் மீது மிகுந்த அன்புள்ளவர், பல நல்ல நூல்கள் பற்றிய விவரங்களை எனக்கு எடுத்துரைப்பதோடு, நான் வரலாற்று நவீனங்கள் பல எழுதப் பெரிதும் தாக்கமளித்தவர்.
பூலித்தேவன் புகழை ஏந்திப் பிடித்தவர்களுள் முக்கியமானவர்கள் என்று தமிழ்வாணன் அவர்களையும் பேராசிரியர் ந.சஞ்சிவி அவர்களையும் குறிப்பிட்டாக வேண்டும், ‘கல்கண்டு' வார இதழில் தமிழ்வாணனும், 'கலைமகள்' மாத இதழில் ந.சஞ்சீவியும் பூலித்தேவன் பற்றி மறைந்து கிடந்த பல வரலாற்று உண்மைகளை எழுதினர். அவற்றையும் நான் வாசித்திருக்கிறேன். புலவர் ந.இராசையா, பூல் மன்னன் புகழைப் பரப்புவதை ஒரு தவம் போல மேற்கொண்டிருந்தவர்.
இந்தப் பெருமக்கள் எழுதிய வரலாற்று ஆதார நூல்களின் அடித்தளத்தில் நின்றே நான் இந்த 'சுதந்திர வேங்கை' நவீனத்தை எழுதியுள்ளேன்.
துர்க்காதாஸ் எழுதிய தமிழ்வீரன் பூலித்தேவன், ந.சஞ்சீவியின் வீரத்தலைவர் பூலித்தேவர், முனைவர் ந.இராசையாவின் மாமன்னான் பூலித்தேவன், பூலித்தேவர் சிந்து, புதுக்கோட்டைச் சண்டை 'விடுதலைப் போரில் தாழ்த்தப்பட்டோரின் பங்க’, எஸ்.குருகுலதாசப் பிள்ளை எழுதிய திருநெல்வேலி சீமைச் சரித்திரம், கால்டுவெல் எழுதி, ந.சஞ்சீவியும், கிருட்டினா சஞ்சீவியும் மொழி பெயர்த்த 'திருநெல்வேலி சரித்திரம்' பேராசிரியர் மு.பாலகிருஷ்ணன் எழுதிய, 'சிவகங்கைச் சாணக்கியன் தளவாய் தாண்டவராய பிள்ளை', தமிழ்வாணனின், 'கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' முனைவர் ம.நடராசன் எழுதிய, விடுதலைப் போரில் பூலித்தேவன், செ.திவான் எழுதிய விடுதலைப் போரில் வீரமிகு முஸ்லிம்கள், எம்.என்.சுப்பிரமணிய ஐயர் எழுதிய, ‘வீர விலாசம்', ஈபேயவன் எழுதிய, ‘மஹாபலியின் மக்கள்', ப.சிவனடி தொகுத்தெழுதிய இந்திய சரித்திரக் காஞ்சியம், வரலாற்றறிஞர் பேராசிரியர் ம.இராசசேகர தங்கமணியின் பாண்டியர் வரலாறு, த.படாலின் குணசேகரனின், 'விடுதலை வேள்வியில் தமிழகம்' டாக்டர் எஸ்.கதிர்வேல் ஆங்கிலத்தில் எழுதிய 'ஹிஸ்டரி ஆஃப் மறவாஸ்' (பக்:115 to 140) ஆகிய நூல்கள் சொல்லும் செய்திகளைத்தான் நான் கதையாக எழுதியுள்ளேன்.
'பூலித்தேவன்' வரலாற்றுக் கதையை நான் எழுதுகிறேன் என்றதும், புதுவையிலிருந்து 'மாந்தன்' இதழை நடத்தும் பொறிஞர் ஞா.ஜோசப் அதிரியன் ஆண்டோ, ந.இராசையா எழுதிய பல நூல்களை எனக்கு அனுப்பி உதவி, பக்க மூட்டினார். மத நல்லிணக்க மாமனிதராகத் திகழும் ஞா.ஆண்டோ எழுதியுள்ள 'பூலித்தேவன் வரலாற்று ஆய்வாளர் முனைவர் த. இராசையாவின் படைப்புலகம்' என்கிற நூல் எனக்கு ஏராளமான செய்திகளை எடுத்துரைத்தது. இந்த நூல்களை எழுதி, வரலாற்று வெளிச்சமிட்ட அறிஞர் பெருமக்களுக்கு நன்றி.