முதல் இராசராச சோழன் காலத்தில் பரதத்திலும், இசையிலும் வல்ல பல நடன மாதர்களைத் திருக்கோயில்களில் தொண்டாற்ற, தமிழகத்திலுள்ள பல ஊர்களிலிருந்தும், குறிப்பாக திருக்காளத்தியிலிருந்தும் அழைத்து வந்து தஞ்சைப் பெருவுடையார் கோயிலருகிலுள்ள தெருக்களில் குடியேற்றிய செய்தி கல்வெட்டுக்களிலிருந்துத் தெரிய வருகிறது. அதைப் போன்றே கங்கை கொண்ட சோழபுரத்திலும், இராசேந்திர சோழன் நடன மாதர்களைக் குடியேற்றினான்.
அவர்கள் தளிச்சேரிப் பெண்கள் எனவும், இறைவனுக்குத் தொண்டு புரிந்து வந்ததால், தேவரடியார் எனவும், நாட்டியத்தில் வல்லுநராயிருந்தமையால் நாடகக் கணிகையர் எனவும், யாரையும் மணந்து கொள்ளாமைப் பற்றிப் பதியிலார் எனவும் அழைக்கப் பெற்றனர்.
பிற்காலத்தில் பெண்கள் சிலர் தாம் விரும்பியவரை மணந்து கொண்டனர். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் நாட்டியப் பெண் ஒருத்தி மணம் புரிந்து கொண்ட செய்தியைக் கல்வெட்டொன்று தெரிவிக்கிறது.
இந்த வரலாற்று நாவல் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நடந்த சில சம்பவங்களுடன் கற்பனையும் சேர்த்துப் புனையப்பட்டுள்ளது.
மூன்றாம் குலோத்துங்கன் ஈழநாடு. பாண்டிய நாடு இவற்றின் மீது படை எடுத்ததுடன் கொங்கு நாட்டின் மீது படையெடுத்துச் சென்றதாக வரலாறு கூறுகிறது. குலோத்துங்கன் கருவூரைக் கைப்பற்றி, அங்கு தான் சோழ கேரளன் என்னும் பெயருடன் மாமுடி சூட்டினார் என்றும், பிறகு தோல்வியுற்ற சேரமன்னர் குலோத்துங்கனிடம் கருவூரையும், சேர நாட்டையும் அவனுக்கே மீண்டும் அளித்தான் என்றும் வரலாறு கூறுகிறது.
மேற்குறிப்பிட்ட வரலாற்று நிகழ்ச்சிகளைக் கொண்டு என் கற்பனையையும் சேர்த்து 'வஞ்சி நகர் வஞ்சி' என்ற புதினத்தைப் படைத்துள்ளேன்.
கருவூர் படையெடுப்பு, மீண்டும் சேரமன்னருக்கு அந்த நாட்டை வழங்கிய செய்திகள் வரலாற்றில் உள்ளன. மரகதவல்லி, அவளிடம் நடனம் பயின்ற மயில்விழி, அவள் காதலித்து மணம் புரிந்து கொண்டது இந்தச் சம்பவங்கள் என் கற்பனை.
- விக்கிரமன்