தமிழ்ப்பெருமக்களை இந்தச் சரித்திரப் புதினத்தைக் காண நுழைவாயில் வழியே அழைத்துச் செல்கிறேன். வாயிற் கபாடம் திறந்துவிட்டது. உள்ளே பார்த்தோமானால் இன்றைக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழகத்து நிலை தெள்ளெனத் தெரிகிறது.
கரிகால் பெருவளத்தானும், சிபியும், கோச்செங்கண்ணனும் கட்டி வளர்த்த சோழ சாம்ராஜ்யம், பல்லவப் பேரரசு காலத்தில் காவிரிக் கரையருகே கையகல நாடாகப் பெருமை இழந்து விளங்கியது. இழந்த பெருமையை மீண்டும் நிலைநாட்ட விஜயாலய சோழதேவர் தோன்றினார். உடலில் பல விழுப்புண்களைப் பெற்று வெற்றிக் கொடி நாட்டிப் பகைவரைப் புறமுதுகிட்டோடச் செய்த அந்த மாவீரன் தஞ்சைபுரியை சோழநாட்டின் தலைநகராக்கினான். அவனது புதல்வர்கள் புத்துயிரூட்டி சோழ நாட்டின் எல்லையை விரிவுபடுத்தி புலிக்கொடியின் மரபிலே மாபெரும் வீரன் இராசராசன் உலகத்து மாபெரும் சக்கரவர்த்திகள் வரிசையில் சமமாக எண்ணத்தக்க அளவுக்குப் புகழுடன் ஆண்டான். தஞ்சைப் பெரியகோயில் இன்றும் அவன் பெருமையைக் கம்பீரமாக நின்று புகழ்ப் பரணி பாடுகிறது. தமிழகத்தின் பொற்காலத்திற்கு எழுஞாயிறாக விளங்கிய இராசராசன் மகன் இராசேந்திரன் தந்தையை விட ஒருபடி மேலேயே சென்றுவிட்டான்.
கடல் கடந்த நாடுகளில் சோழர்தம் வீரத்தை நிலை நாட்டினான். வடக்கில் கங்கைவரை சென்று மங்காப் புகழை வென்று வெற்றியின் சின்னமாகக் கங்கைகொண்ட சோழபுரம் எனும் நகரத்தை நிறுவினான்.
கங்கைகொண்ட சோழன் நிர்மாணித்த கங்காபுரியில் தான் நம் கதை தொடங்குகிறது. இன்றைய வாழ்க்கையும், சம்பவமும் நாளைய சரித்திரம். இராசராசன் விதைத்து, இராசேந்திரன் வளர்த்து அவனது மக்கள் ஒருவர் பின் ஒருவராகக் கட்டிக் காத்த சோழ நாட்டிற்கு ஒரு சமயம் பெரும் ஆபத்து நெருங்கியது. சோழ பரம்பரைக்கே முடிவு ஏற்பட்டுவிடுமோ? எனும் அச்சம் எங்கும் எழுந்தது. பகைவர்கள் சமயம் பார்த்துக் கத்தியைத் தீட்டிக்கொண்டிருந்தார்கள். உள் விரோதிகள் சதி வீரர்களாக மாறி கவிழ்க்கக் காலத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
அந்த யுக சந்தி வேளையிலே ஓர் இளைஞன் தோன்றினான். அவனுக்கு நியாயமாகச் சேரவேண்டிய நாடு கூடக் கிடைக்கவில்லை. போர் முனைகளிலேயே காலங்கழித்து சாம்ராஜ்ய நினைவே இல்லாமல் இருந்த வீரன் மாபெரும் சோழ சாம்ராஜ்யம் சின்னாபின்னாமாகாது காப்பாற்றினான். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்றாலும் மனித குல ஆசாபாசங்கள், எண்ணங்கள், பழக்கங்கள் யாவும் என்றைக்கும் மாறாமலிருப்பவைதாம். சோழநாட்டின் விஜயாலயர் வழிவந்த அதிராசேந்திரனையும், கீழைச் சாளுக்கிய விசயாதித்தனையும் அவன் மகன் சத்திவர்மனையும், அரச குடும்பத்துப் பெண்களான அம்மங்கை தேவியையும், இளவரசி மதுராந்தகியையும் இன்னும் எத்தனையோ பேரையும் இந்த நாவலில் சந்திக்கப் போகிறீர்கள்.
அவர்களையெல்லாம் காண அதிக நேரம் தடையாயிராமல் நுழைவாயிலின் தாளைத் திறந்து அழைக்கிறேன், வணக்கம்.