நினைவு தெரிந்த நாளிலிருந்து வாசிப்பின் சுவையில் அமிழ்ந்தவள் நான். வீட்டில் சதா இறைந்து கிடந்த அருமையான புத்தகங்களுக்கும் அதில் பங்குண்டு. அவை வளரும் வயதில் என்னில் பதிக்கப்பட்ட தங்க விதைகள்! அவை முளைத்த போதில் என்னையும் வளர்த்து விட்ட அற்புதங்கள்! மிக இளம் வயதிலேயே நான் தினம் வேதம் வாசித்ததுண்டு. ஒரு வருடத்திற்கு ஒரு முறை அதை முழுக்க வாசித்து விடும் தீவிரத்துடன். ஆண்டவர் என்னை எழுதுவதற்காகவே தேர்ந்தெடுத்து, வளர்த்த விதம் அது என்பது இப்போது விளங்குகிறது. ஆர்வமும் ஆசையுமான துறையிலேயே ஈடுபடும் ஆனந்தம் எத்தனைப் பேருக்கு அமைகிறது? அதை எனக்கு அருளிய என் தேவனுக்கு நன்றி. என்னை போஷித்த, எனக்கு போதித்தது போன்ற கதைகளை நான் இப்போது மறுபடி விதைத்திருக்கிறேன். தேவனின் ஆசீர்வாதம் அதை நனைத்து உங்களில் வளர்க்கட்டும். நேரத்தைப் போக்குவதற்காய் அல்ல. வரும் நாட்களை ஆக்குவதற்கு இப்புத்தகம் உங்களுக்குப் பயன்படட்டும். இச்சின்ன கதைகள் மூலம் உங்களில் பதியும் கருத்துக்கள் தேவைப்படும் சமயம் உங்கள் மனங்களைத் தேற்றி, நம்பிக்கையினால் நிரப்புமானால்... அதைவிட வேறென்ன எனக்குத் தேவை? பல கிறிஸ்தவ பத்திரிகைகளில் வந்த சிறுகதைகளைத் தொகுத்து புத்தகங்களாய் தருகிறேன் விதைகள் எங்கெங்கோ தூவப்படுவது ஒரு விதமெனில் அவற்றை பக்குவமாய் ஓரிடத்தில் விதைத்துப் பன்மடங்காய் பயனுறச் செய்வதும் தனி மகிழ்வல்லவா? எங்களது பங்கு முடிந்து விட்டாலும், வாசிக்கும் உங்களில் இக்கதைகள் கிளர்ந்தெழ தேவனை வேண்டுகிறேன். அன்பான வாழ்த்துக்களுடன்... காஞ்சனா ஜெயதிலகர்