இந்த ஆரோக்கிய சமையல் பகுதியை வழங்கும் அம்பிகா சேகர் நல்ல அனுபவம் வாய்ந்த ஒரு டயட்டீஷியன். அவர், இந்த ஆரோக்கிய சமையலை ஒரு மருந்து போல் அணுகாமல், நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளையே எப்படி ஆரோக்கிய சமையலாக மாற்ற முடியும் என்று செய்து காண்பித்திருக்கிறார். அவற்றில் 30 வகையான சமையல் வகைகளை ஏற்கனவே உங்களுக்காக இந்நூலின் ‘பாகம் 1’ மூலம் வழங்கினோம். அதற்கு நீங்கள் கொடுத்த உற்சாகத்தையும், வரவேற்பையும் தொடர்ந்து இதோ ‘பாகம் 2’ உங்கள் கையில். இதிலும் மேலும் பல சுவையான ஆரோக்கியமான சமையல் குறிப்புகள் உங்களுக்கு இடம் பெற்றுள்ளன. இதிலுள்ள ஒவ்வொரு சமையலையும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். சுவையாக சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
சென்னை பல்கலைக்கழகத்தின் பாரதி மகளிர் கல்லூரியில் B.Com பட்டப்படிப்பை முடித்த திருமதி. விஜயலட்சுமி ரமேஷ், ஆனந்த விகடன் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவின் செயலராக பணியாற்றியவர். பிறகு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றதோடு, ‘சன் டிவி’ மற்றும் ‘கலைஞர் டிவி’ ஆகிய சேனல்களில் புகழ்பெற்ற ‘சக்தி மசாலா சமையல்’ நிகழ்ச்சியை தொடர்ந்து 1000 வாரங்கள் இயக்கிய ஒரே இந்திய இயக்குநர் என்கிற பெருமை திருமதி. விஜயலட்சுமி ரமேஷ் அவர்களுக்கு உண்டு.
அவர் தொலைக்காட்சியில் 20 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கி வந்த, அந்த புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியின் சுவையான பல்வேறு பகுதிகளை இப்போது நீங்கள் மின்னூல் வடிவமாக படிக்கும் வாய்ப்பைப் பெற்று இருக்கிறீர்கள்.