ஆரோக்கிய உணவு என்று சொல்லும்போது எந்த உணவுப் பொருள்களையெல்லாம் தேர்ந்தெடுத்து அவற்றை எந்தெந்த விகிதத்தில் கலந்து சாப்பிட வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அதை எந்தவிதத்தில் சமைக்க வேண்டும் என்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நல்ல சத்துள்ள காய்கறிகளும், தானியங்களும், உணவுப் பொருட்களும்கூட நாம் அவற்றை முறையாக சமைக்காவிட்டால் நம் உடல் ஆரோக்கியத்துக்கு அவை எதிராக அமைந்துவிடுவதுண்டு.
தவிர. நம்மில் பெரும்பாலோருக்கு இன்று உள்ள இன்னொரு பிரச்சனை, உடல் இளைக்க பாடுபடுவது. இதனுடைய அடிப்படையும் அதிக கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை நாம் அன்றாடம் அதிகம் சேர்த்துக்கொள்வதுதான். எத்தனைதான் உடற்பயிற்சி செய்தாலும்கூட, வாக்கிங் போனாலும் கூட உடலை பராமரிக்க தேவையானது கொழுப்புச் சத்து அதிகம் இல்லாத உணவு.
சென்னை பல்கலைக்கழகத்தின் பாரதி மகளிர் கல்லூரியில் B.Com பட்டப்படிப்பை முடித்த திருமதி. விஜயலட்சுமி ரமேஷ், ஆனந்த விகடன் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவின் செயலராக பணியாற்றியவர். பிறகு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றதோடு, ‘சன் டிவி’ மற்றும் ‘கலைஞர் டிவி’ ஆகிய சேனல்களில் புகழ்பெற்ற ‘சக்தி மசாலா சமையல்’ நிகழ்ச்சியை தொடர்ந்து 1000 வாரங்கள் இயக்கிய ஒரே இந்திய இயக்குநர் என்கிற பெருமை திருமதி. விஜயலட்சுமி ரமேஷ் அவர்களுக்கு உண்டு.
அவர் தொலைக்காட்சியில் 20 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கி வந்த, அந்த புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியின் சுவையான பல்வேறு பகுதிகளை இப்போது நீங்கள் மின்னூல் வடிவமாக படிக்கும் வாய்ப்பைப் பெற்று இருக்கிறீர்கள்.