இன்றைய புதுயுகப் பெண்களின் வேலைப்பளுவை மிகவும் குறைக்கக்கூடிய ஒரு மந்திரப் பெட்டி மைக்ரோவேவ் ஓவன். மைக்ரோவேவ் சமையல் ஒரு அற்புத சமையல்... நெருப்பு. புகை. எண்ணெய் பிசுக்கு இவை ஏதுமில்லா சமையல். இதனால் அடுப்படியை சுத்தம் செய்வது எளிதாகிறது. நேரம் மிச்சமாகிறது... என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நம்மில் பலரிடையே மைக்ரோவேவ் சமையல் சாதனம் பற்றி பலவிதமான தவறான கருத்துகள் நிலவுகின்றன. இதனால் மின்சார செலவு அதிகமாகும். தென்னிந்திய உணவு வகைகளை சமைக்க முடியாது, உணவை சூடுபடுத்த மட்டுமே மைக்ரோவேவ் பயன்படும் என்றெல்லாம் பலவிதமான கருத்துக்கள். அப்படியல்ல... ‘மைக்ரோவேவ் ஓவன்’ -ல் தென்னிந்திய சமையலும் சுவையாக செய்யலாம். அதில் பக்குவமாக சமைக்கப்பட்ட உணவுகள் நல்ல சுவையுடனும், சத்துடனும், இருக்கின்றன என்பதை பல சமையல் வல்லுநர்கள் நிரூபித்திருக்கிறார்கள். மேலும், இதில் உணவு தயாராகும் நேரமும் மிகவும் குறைவு என்பதை அவர்கள் உணர்த்தியிருக்கிறார்கள். மைசூர் பாகு, சமோஸா, வடை போன்ற சாதாரணமாக அடுப்பில் சூடுபடுத்த முடியாத சில உணவு வகைகளைக்கூட அவற்றின் சுவை குறையாமல் மைக்ரோவேவில் சூடுபடுத்த முடியும். அதேபோல நாம் ஃபிரிட்ஜில் உறைந்த நிலையில் வைத்திருக்கும் உணவுகளைக்கூட எடுத்து உடனடியாக சூடுபடுத்த இயலும். மைக்ரோவேவ் சமையல் உடலுக்கு தீங்கு செய்யும் என்றுகூட வதந்தி உண்டு. அது வதந்தி மட்டுமே உண்மையல்ல. உடல் எடை குறித்து மிகவும் கவனத்துடன் இருப்பவர்களுக்கு மைக்ரோவேவ் ஒரு வரப்பிரசாதம். காரணம், இதில் சமையல் செய்ய நாம் சாதாரண அடுப்பில் சமைக்கும்போது உபயோகிக்கும் எண்ணெய் அல்லது நெய்யின் அளவில் கால்பங்கு பயன்படுத்தினாலே அதே அளவு சுவையுடன் உணவை தயாரித்து விடலாம். மொத்தத்தில் மைக்ரோவேவ் ஓவனை பக்குவத்துடன் பயன்படுத்தத் தெரிந்தால் அது நம் அடுக்களையில் ஒரு அன்பான தோழியைப் பற்றி அறியலாம்.