சில நினைவுகள் இணக்கமாகவும், சில பிணக்கமாகவும், சில விதை நெல்லாகவும் என்னுள் விழுந்தவைகளே “வாசிப்போம் யோசிப்போமாக” எழுத்துருவில் வந்தது, சின்னச் சின்ன வாழ்வின் அன்றாட சந்தோஷங்களும், மனச் சிதறல்களும், சிதைவுகளும் எல்லோர் வாழ்விலும், ஏதோ ஒரு கட்டத்தில் அவர்களுக்குத் திருப்புமுனையாகக் கூட மாறியிருக்கக் கூடும் என்பதைத் தேனீயின் தேடலாகக் கொண்டு அமைத்தக் கூடு இது.
என்னை பாதித்தவைகளும், எனக்கு போதித்தவைகளும் உங்களுக்கும் நேர்ந்திருக்கக்கூடும் என்பதால், ஆழ்ந்த உள் மன சிந்தனைகளின் பிரதிபலிப்பாய் உங்கள் முன் வைக்கிறேன். நேசித்துக் கொண்டே வாசிப்பதும், வாசித்த பின் யோசிப்பதும் வாசகர்களின் உள் வாங்கும் உணர்வுகளால் நிச்சயமாக நடந்தேறி, பிறரிடம் பேச வைக்குமென்ற திடமான நம்பிக்கையுடன் புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன்.
அனுராதா சௌரிராஜனாகிய நான் தனியார் வங்கியில் பணிபுரிந்து, ஓய்வு பெற்று,தமிழின் மேல் உள்ள காதலாலும், சமூகப் பொறுப்புணர்வுகளாலும் உந்தப் பட்டு எழுதுவதை என் முழு நேர விருப்பமாக்கிக் கொண்டேன். தற்சமயம் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன்! என் எழுத்துக்களை உள்வாங்கி வாசிப்பவரின் மேலான விமர்சனங்களே என்றும் என் பேனாவின் தீராத மை.