சமூகநீதியின் தாயகம் தமிழகம் என்பதை இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. தமிழகத்தில் வாழும் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை, அவர்களிலும் நலிந்தவர்களை - நசுக்கப்பட்டவர்களை முன்னேற்றுவதற்குத் திராவிட இயக்கம் கண்ட அருமருந்து சமூக நீதி. அந்தச் சமூக நீதியை வென்றெடுப்பதில் - பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் நடேசனார், முத்தையா முதலியார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரும், அவர்களைத் தொடர்ந்து இன்றைய தி.மு.கழகமும் மேற்கொண்ட - மேற்கொண்டுவரும் முயற்சிகளை - போராட்டங்களை எல்லாம் இந்நூலில் தெளிவாகத் தொகுத்துத் தந்துள்ளார்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன் கரிசல் மண்ணான கோவில்பட்டி அருகிலுள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அரசியலில் தன் தடத்தைப் பதித்து வருகிறார்.
மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நதிகள் இணைப்பு மற்றும் தேசியமயமாக்கல், விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்காகப் பல்வேறு பொதுநல வழக்குகளை உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் போன்றவற்றில் தொடுத்துள்ளார். Amenesty International இயக்கத்திலும் இணைந்து பணியாற்றி வருகிறார். பல்வேறு அரசியல் போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார். தொழிலாளர் அமைச்சகத்தின் குழந்தைத் தொழிலாளர் ஆலோசனைக் குழு போன்ற பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்களின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றியவர் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக மத்திய அரசால் பலமுறை நியமிக்கப்பட்டுள்ளார். கொச்சித் துறைமுகக் கழகத்தின் நடுவராகப் பணியாற்றினார். ஐ.நா. மன்றத்தில் நியூயார்க்கில் கிடைத்த பெரிய பொறுப்பை மறுத்து தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்திய சட்ட மையத்தின் உறுப்பினராகவும் இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவில் இணைச் செயலாளராகவும் பொறுப்பேற்றுப் பணியாற்றுகிறார்.
'உரிமைக்குக் குரல் கொடுப்போம்'. 'மனித உரிமைச் சட்டங்களும் சில குறிப்புகளும்' 'நிமிர வைக்கும் நெல்லை', 'சேதுக்கால்வாய் ஒரு பார்வை. கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி, தமிழ்நாடு 50, 123 இந்தியாவே ஓடாதே நில்', 'கச்சத்தீவு'. தி.மு.க. - சமூக நீதி DMK - Social Justice', "முல்லைப் பெரியாறு, தூக்குக்கு தூக்கு" "அழகர் அணை திட்டம் விவசாயிகள் போராட்டம், ஈழத்தமிழர் பிரச்சனை போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசின் சார்புள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் போன்ற அமைப்புகளுக்கு அரசு வழக்கறிஞராக இருந்துள்ளார். கி.ரா.வின் கதை சொல்லி யின் இணையாசிரியர். மற்றும் பொதிகை - பொருநை - கரிசல் கட்டளை' அமைப்பின் நிறுவனர்.