ரவிகுல திலகன் (செம்பியன்) பழையாரைச் சோழ மன்னர்களில் விஜயாலய சோழர் என்பவர் இணையில்லா வீரப்புகழ் பெற்றவர். இவர் பற்பல யுத்தங்களில் முன்னணியில் நின்று போர் செய்து உடம்பில் தொண்ணூற்றாறு காயங்களை அடைந்தவர். ‘எண்கொண்ட தொண்ணூற்றின் மேலுமிரு மூன்று புண்கொண்ட வென்றிப் புரவலன்’ என்றெல்லாம் பிற்காலப் புலவர்களால் பாடப்பெற்றவர். இத்தனை விழிப்புண்களில், அல்லது பகைவர் அளித்த வீர பதக்கங்களில் சிலவற்றை விஜயாலயன் அடைந்திருந்த கட்டத்தில் குறிப்பாக ஒரு கண்ணை வீரகாணிக்கையாகச் செலுத்தியிருந்த நிலையில் இக்கதை ஆரம்பமாகிறது. தன்னை வெறுத்த பேரழகி, கலையரசி உத்தமசீலியை அவன் அரும்பாடுபட்டு அடைந்து, அவள் மூலம் குலக்கொழுந்தாக (இராஜகேசரி) ஆதித்தன் உதயமாவதுடன் இது நிறைவு பெறுகிறது. எத்தனை எத்தனையோ வித்தைகள், வியப்புகள், மர்மங்கள், திகைப்புகள், காதல் காட்சிகள், களியாட்டங்கள், வீரதீர செயல்கள், தியாகச்சுடர்கள், கண்ணீர்ப் பொழிவுகள், நவ நகைச்சுவைகள் பொங்கும் கட்டங்கள் உள்ளடங்கிய இந்த நாவலை நாமும் படித்து சுவைப்போம்.