வைணவர்கள் அறிந்திருக்க வேண்டிய 3 ரகசியங்கள் (ரஹஸ்யத்ரயம்) 1. திருமந்திரம், 2, துவயம், 3. மாமேகம் சரணம் வ்ரஜ என்ற சுலோகத்தின் பொருள். பஞ்ச சம்ஸ் காரம் என்பது சமாஸ்ரயணம், புண்ட்ரம், நாமம், மந்திரம், யோகம் என்ற ஐந்து. வரிசைக்கிரமமாக இவை விளக்கப் பட்டுள்ளன. நமது உடல் நமது உயிரின் (ஆன்மாவின்) வீடு; நமது ஆன்மா பிரும்மமான பரமாத்மாவின் வீடு; எனவே பிரும்மமும் உண்மை, உலகமும் உண்மை; ஜீவாத்மாவும் உண்மை. இதை வைணவம் தத்வத் தரயம் என்கிறது. இதில் மாயை என்பதற்கு இடமில்லை.
வைணவ சித்தாந்தத்தில் சேர எந்த ஒரு அங்கீகாரமும் தேவையில்லை. அந்தணராக இருக்க வேண்டாம். நாளும் மூன்று முறை அனல் ஓம்பும் சடங்கு செய்ய வேண்டாம். ஏழை செல்வந்தன் வேறுபாடு இல்லை. பழைய குல அடையாளங்கள் மறைய வேண்டும். பானை செய்பவரும் வேதம் ஓதுபவரும் சிறுவினைஞர்களும் ஒன்றே என்பதுதான் வைணவம் என்று இந்த நூலில் வெகு அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டில் வெளியாகியிருக்கும் இந்த நூல் இல்லந்தோறும் இருக்க வேண்டிய நித்யானுசந்தானம் என்றால் மிகையில்லை.