இது சக்தி நிலை விளக்கும் நூல்.
அணங்கு என வணங்கப்படும் பெண் தெய்வசக்தியின் உயர் வழிபாடு சக்தி வழிபாடுதான். அதனை சாக்தம் என்பர். காளியை வழிபட்ட சித்தரே மகாகவி பாரதி என்பதற்கு அவர் வாழ்வின் சான்றுகள் உள்ளன.
தெய்வ சாந்நித்யம் பெற்ற அபிராமி பட்டர் தம் வாழ்வில் நிகழ்ந்த சோதனையைஅபிராமி அந்தாதியாகப் பாடவில்லை. சோதிக்கப்படும்போதே பாடினார். ஆம். அபிராமி பட்டருக்கு தண்டனையாக அவர் உறியில் ஏற்றப்படுகிறார். அதன் கீழ் தீயானது மூட்டப்பட்டு ஒவ்வொரு பிரியாக அறுபட அவர் தீயில் வீழ வேண்டும். அவர் உயிர் போக வேண்டும் என்பதே மன்னனின் ஆணை.
காவலாளிகள் உறியில் ஒவ்வொரு பிரியின் கட்டாக வெட்டுகிறார்கள். ஒவ்வொரு பாடலாக அருவியெனப் பாடுகிறார்.
ஒவ்வொருவரும் செல்ல வேண்டிய மிகச் சக்தி வாய்ந்த கோவிலாக திருக்கடவூர் மயானம் கோவில் இருக்கிறது. இந்த நூல் படித்து முடிக்க வேண்டிய நூல் அல்ல. படித்து பக்தியில் முழுக வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.
கணையாழியில் சுஜாதா மூலம் 1993 முதலாக அறியப்படும் பா. சத்தியமோகன்(23.06.1964), திருச்சி மாவட்டம் துறை மங்கலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். நெய்வேலியில் மின்பிரிவில் தலைமைப் பொறிமேலாளர். அனுபவித்து நேர்வதைச் சொற்களால் துழாவி பிரபஞ்சம் முழுவதையும் தேடுபவராகவும்; தேடலின் வழியே பிரபஞ்சமே கவிதையாய் நேர்வதாகவும் பரிமாற்றம் செய்து கொள்ளும் மன உலகப் பயணம் இவருடையது.
வாழ்வின் அழுத்தமான ஒவ்வொரு கணத்திலும் ஒரு நடசத்திரத்தைத் தேடி எடுப்பவராகவும்; சீரான நிகழ்வுகள் நடுவே அபத்தம் ஒளிந்திருப்பதையும் தனக்கே உரிய மொழி லாவகத்தோடு பகிர்பவர். சங்ககால மொழி துவங்கி நவீன கவிதை இயங்குமுறை வழியே தனது முப்பதாண்டு கவிதை வாழ்வை 15 தொகுப்புகள் மூலமாக தமிழ் சமூகம் அறியத் தந்தவர். சமகால நவீனக் கவிதைகளில் ஞானகூத்தன், எஸ். வைத்தீஸ்வரன், தேவதேவன், ஆத்மாஜீவ் வழியே, கவிதைமூலம் பேருண்மை மீது வரைந்த மொழிச் சித்திரங்களாக இவரது கவிதைகளை வாசகன் கவனிக்க முடியும்.