கண்காட்சிக்குப் போன இட நெரிசலில் குடை ராட்டினத்தின் பல ஆண்டுகளாய் இயக்கப்படாத பகுதிகள் க்றீச் க்றீச் ஒலிகள் எங்கோ இருக்கும் தெருக்களில் தூரத்தில் கேட்பதுபோல மிகப் பெரிய அக ஓசை கேட்கிறது.
கணையாழியில் சுஜாதா மூலம் 1993 முதலாக அறியப்படும் பா. சத்தியமோகன்(23.06.1964), திருச்சி மாவட்டம் துறை மங்கலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். நெய்வேலியில் மின்பிரிவில் தலைமைப் பொறிமேலாளர். அனுபவித்து நேர்வதைச் சொற்களால் துழாவி பிரபஞ்சம் முழுவதையும் தேடுபவராகவும்; தேடலின் வழியே பிரபஞ்சமே கவிதையாய் நேர்வதாகவும் பரிமாற்றம் செய்து கொள்ளும் மன உலகப் பயணம் இவருடையது.
வாழ்வின் அழுத்தமான ஒவ்வொரு கணத்திலும் ஒரு நடசத்திரத்தைத் தேடி எடுப்பவராகவும்; சீரான நிகழ்வுகள் நடுவே அபத்தம் ஒளிந்திருப்பதையும் தனக்கே உரிய மொழி லாவகத்தோடு பகிர்பவர். சங்ககால மொழி துவங்கி நவீன கவிதை இயங்குமுறை வழியே தனது முப்பதாண்டு கவிதை வாழ்வை 15 தொகுப்புகள் மூலமாக தமிழ் சமூகம் அறியத் தந்தவர். சமகால நவீனக் கவிதைகளில் ஞானகூத்தன், எஸ். வைத்தீஸ்வரன், தேவதேவன், ஆத்மாஜீவ் வழியே, கவிதைமூலம் பேருண்மை மீது வரைந்த மொழிச் சித்திரங்களாக இவரது கவிதைகளை வாசகன் கவனிக்க முடியும்.