ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையாக உடல்வாகு இருப்பதால் முதன் முதலாக யோகா கற்க விரும்புபவர்கள் ஒரு குருவின் மூலம் நேரடியாக பயிற்சி பெருவதுதான் கலையின் சிறப்பு. இந்நூல் படத்துடன் விளக்கியிருப்பதால் அனைவருக்கும் எளிதில் யோகா கலை பிடிபடும். சூர்ய நமஸ்காரம் என்பது நமது உடலின் பல்வேறு முக்கியமான மண்டலங்களாகிய சுவாச மண்டலம், ஜீரண மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், நரம்பு மண்டலம், தசை நார்கள், நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் மூளை உள்ளிட்ட புலன்களை வலிமையாக வைத்திருக்க உதவும் ஒரு பயிற்சியாகும். எட்டு வயதிற்கு மேற்பட்டு எண்பது வயதிற்கு உட்பட்ட எந்த ஒரு சாதாரண உடல்வாகுள்ள மனிதரும் இதனைச் செய்ய முடியும். இந்த சூரிய நமஸ்காரம் வளரும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பேரளவில் நன்மை பயக்கின்றது. தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரம் செய்வோருக்கு, கட்டுப்பாட்டுடன் கூடிய சீரான உடல் வளர்ச்சி, ஆரோக்கியத்துடன் கூடிய திறன்மிகுந்த உடல், அமைதியுடன் கூடிய சமநிலையான மனநிலை, ஆழ்ந்த கவனத்துடன் கூடிய கூடுதலான செயல்திறன், நினைவாற்றலுடன் கூடிய உணர்வுகளின் மீதான கட்டுப்பாடு ஆகிய பலன்கள் கிடைக்கின்றன.