இன்னும் ஒரு தலைமுறை தாண்டினால் குடும்ப உறவுகளே சிதைந்து போய்விடுமோ என்ற பயம் ஏற்படுகிறது... திருமண பந்தத்தின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இளைய தலைமுறைக்கு குறைந்து வருகிறது. ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் சுதந்திரமாகவே இருக்கலாமே என்று நினைக்கும் தலைமுறை அதிகரித்து வருகிறது. திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்பாத ஒரு சிலர்.
நம் கலாச்சாரம், பண்பாடு எல்லாம் இனி ஏட்டளவில்தான் இருக்கும். இனி நாம் நினைத்தாலும் பின்னோக்கி செல்ல முடியாது. இதன் விளைவுகள் இன்னும் ஒரு 15 - 20 வருடங்களில் மிக வித்தியாசமான ஒரு தலைமுறையை உருவாக்கி இருக்கும். இன்றைய, கால மற்றும் கலாச்சார மாற்றத்தை பார்க்கும் போது மனதில் எழும் ஆதங்கமே கட்டுரைத் தொகுப்பு.
“யதார்த்த வாழ்வியல் கட்டுரைகள்” இத்தொகுப்பில் 20 கட்டுரைகள் இருக்கின்றன. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி கட்டுரைகள்தான். இவை என் தனிப்பட்ட கருத்து. யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் எழுதவில்லை. என் வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தி இருந்தால், தயவு செய்து மன்னித்து கடந்து செல்லவும்.
"வள்ளி சுப்பையா" என்ற பெயரில் முகநூலில் எழுதி வரும் தி. வள்ளி சிறந்த சிறுகதை எழுத்தாளர். 150க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், குறுந்தொடர்கள், நெடுந்தொடர்கள் எழுதியுள்ளார். மின்னிதழிலும் அச்சு இதழிலும் எழுதி வருகிறார். மனதுக்கு நெருக்கமான எளிய நடைக்கு சொந்தக்காரர்.
ஆசிரியரின் பிற வெளியீடுகள்...
1) "நினைவுச் சிறகுகள்" (இவர் கணவருடைய மருத்துவ அனுபவங்களின் பகிர்தல்.)
2)"நிழல் அல்ல நிஜம்.." யதார்த்த வாழ்வியல் சிறுகதைகளின் தொகுப்பு
3) "சுந்தர பவனம்" 100 அத்தியாயங்களைக் கொண்ட 5 தலைமுறைகளை அலசும் நாவல்..