மொழியின் தொடர்ச்சியிலிருந்து ஒரு ‘பிடுங்கல்’. அவளது ஒரு தேர்ந்தெடுப்பைப் படைப்பாளி புத்தகமாக்குகிறான் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். எந்திரமயமான வாழ்வில் மொழியை மட்டும் உணர்வுத் தளத்தில் வைப்பது, படைப்பாளியானவன் தப்பித்து உன்னத நிலையை அடையவும் படைப்புரிமை கோரவும் வைக்கிறது. ஓர் இயங்கும் புத்தகம் தனது அமைப்பினுள் பல உதிரிபாகங்களை இணைத்துக் கொள்கிறது. அதை மறைத்து, படைப்பாளி பெயரிட்டு விடுவதால் தன்னையும் மறைத்துக் கொள்பவனாகிறான் பெயரிட்டவனையே கலைத்துப் போடும் முதல் உரிமையோடு ஓர் இயங்கும் புத்தகமானது வாசகன் வசப்படுகிறது. ஏற்கெனவே படைப்பாளி கை வைத்ததால் மாறியிருக்கும் இதன் புதிர் அமைப்புகளை வாசகன் முற்றிலும் கலைத்துப் போட்டுக்கொள்ள முடியும் இப்போது அது செயலற்றுக் கிடக்கிறதா இல்லை மறைத்துக்கொண்டு இயங்குகிறதா என்பதெல்லாம் வாசகன் கையில் எடுத்தவுடன் மாறுகின்ற அதன் தோற்றத்தைப் பொறுத்தது. எப்படி ஒரு புத்தகத்துக்கு ஒரு படைப்பாளி இல்லையோ அதைப் போலவே எந்தப் புத்தகத்துக்கும் ஓர் ஒற்றை வாசிப்பு இல்லை என்றாகிறது.
அடுக்கடுக்காகப் படைப்புகள் வருகின்றன. அத்தனை புத்தகமாக்கலுக்குப் பின்பும் மொழியானது தனித்தனி எழுத்து அலகுகளாக மீண்டுகொள்வதைப்போல் அத்தனை வாசிப்பிற்குப் பின்பும் அது மீண்டுகொள்கிறது. ஆக துவக்குபவன், துலங்குபவன், மறைத்துக் கொண்டவன், வெளிப்பட்டவன், முடித்து வைப்பவன், அவிழ்பவன், மீட்பவன், மாற்றுபவன், இணைபவன், மறுபடைப்புச் செய்கிறவன் என ஒரு புத்தகமானது பல தன்னிலைகளால் படைப்பாளியின் பிரக்ஞைக்குட்பட்டே ஓர் அமைப்பினுள் கட்டப்படுகிறது வாசிக்கப்படும் கணத்தின் புதிர் தன்மையோடும் அல்லது முற்றிலும் மறுதலித்துவிடக்கூடிய வாய்ப்போடும் ஒரு பிரதியானது சுட்டப்பட்டவனின் ஆளுமையோடு எதிர்நிற்பதுதான் அரசியலாகிறது. இது கணநேரம் தன்னிலை முன்னிலை சிக்கலாகத் தோன்றி, படைப்பாளி – வாசகன் என்ற இருமை அமைப்பிற்குள் முரண் இயக்கம் துவங்குகிறது.
இந்த முரண் இயக்கம் மூன்றாம் உலக அடிமைகள் கலாச்சாரத்தில் முற்றிலும் செயற்கையாகத் திணிக்கப்பட்டது. உண்மையில் ஒரு வாசகன் எத்தனையாவது சுற்றில் ஒரு படைப்பாளிச் செயல்பாட்டை நேர் இணக்கமாகச் சந்திக்கிறான் என்பதைப் பொறுத்து அவ்விருமையின் விருப்புறுதி, விளைவுறுதி பரிவர்த்தனை செய்துகொள்ளப்படுகிறது. அது மீண்டும் எதிரிணை இயக்கங்களாக பன்மைப்பட்டுக் கொண்டாலும் அது ஒரு பொது எதிரியை எல்லாத் தளங்களிலும் குலைப்பதாகவே இருக்கும். நகர்ந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தில் படைப்பாளியின் செயல்பாட்டை ‘ஒளிவட்டம்’ என ஒற்றைத் தளத்தில் பார்ப்பது கவனக்குறைவானது. உலகம் ஒற்றையடிப் பாதையல்ல அவன் சொற்படியே இந்த உலகமே பின்பற்றுவதற்குப் படைப்பாளி கடவுளுமல்ல. அவனின் ஆளுமைக்கும் அதிகாரத்திற்கும் துல்லியமான வேறுபாடு இருக்கிறது. அவன் ஆளுமையைச் சகிக்க வொட்டாமல் புறத்தே தன்னைப் போலவே இருக்கும். அவனை மீண்டும் அடிமை நிலைக்கு இழுத்துக் கொண்டுவிடுவது வாசக மறுபடைப்பாக இருக்கிறது. என்ன செய்ய! வாழ்ந்து முடிந்த வரலாற்றையே மறுபடியும் வாழ நிகழ்வது அடிமைகளின் தவிர்க்கவியலா அறமும் தர்மமும் ஆகிறது.
உண்மையில் அடிமைகளின் கலாச்சாரத்தில் வாசிப்பு முதன்மையானது என்பது படைப்பாளியின் மரணத்தைத் தள்ளிப்போடுவதில் இருக்கிறது. படைப்பாளி இறந்தாலும் கடவுள் இறக்கப் போவதில்லை. மூன்றாம் உலகங்களில் அவர் தெருக்களில் திரிகிறார். படைப்பாளியின் செயல்பாட்டால் வாசகனை அச்சுறுத்தியும் வாசக மறுபடைப்பால் படைப்பாளியை மரணமடைய வைத்தும் ஒற்றனாக, தூதனாக, முகவராக இன்னும் பலவாகத் தெருக்களில் திரிகிறார். இதற்கிடையேதான் படைப்பாளியின் செயல்பாடு என்பது நகர்ந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தில் எதையும் இழக்காமல் பெற முனையும் வாசகத் தீர்மானமாகவும் அவனது அனுபவமாகவும் பதற்றமுறுகிறது. பங்கேற்று ஊடுருவுகிறது.
யவனிகா ஸ்ரீராம் (1959)
இளங்கோவன் என்ற இயற்பெயர் கொண்ட யவனிகா ஸ்ரீராம், தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி என்ற மலையடிவார ஊரைச் சேர்ந்தவர். இராமசாமி மகமாயி தம்பதியினரின் இரண்டாவது மகனாகிய இவர், பள்ளிக் காலத்திலேயே கவிதைகளும் கட்டுரைகளும் எழுதுவதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். காபி வியாபாரத்தின் பொருட்டு சிறுமலை மற்றும் மேற்கு மலை சரிவுகளில் 18 வருடங்கள் அலைந்தவர். துணி வியாபாரத்திற்காக இந்தியாவின் பல பகுதிகளில் பயணித்திருக்கிறார். என்பதோடு பலமுறை வணிகத்திற்கென மலேசியா சிங்கப்பூர் வரை போய் வந்தவர். இலக்கியச் சந்திப்பிற்கென ஒருமுறை இலங்கை வரையும் சென்று வந்துள்ளார்.
தன்னுடைய படைப்புகள் அனைத்தும் தனது பயணங்களால் ஒரு சித்து நிலையில் சேகரிக்கப்பட்டது என்று கூறும் இவரிடமிருந்து இதுவரை எட்டு கவிதைத் தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. இவருடைய கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி கன்னடம் மற்றும் இத்தாலி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் தமிழ் முதுநிலை மாணவர்களுக்கிடையே நவீன கவிதைகள் குறித்து அவ்வப்போது பயிற்சி அளித்து வருகிறார். இவருடைய படைப்புகள் இன்றைய பின்காலனிய அல்லது மறு காலனியப் பிரச்சினைகள் குறித்து அதிகம் கவனம் கொண்டவையாக இருக்கின்றன.
மக்களுக்கும் சந்தைக்குமான உறவுகள் ஓருலகமயமாக்கல் போன்றவற்றால் உலகெங்கிலும் உள்ள பிராந்திய தேசியக் கலாச்சாரங்கள் எவ்வாறு சீரழிகின்றன. ஒரு தனி மனிதன் இந்த நுகர்வுக் கலாச்சாரத்தில் என்னவாக இடம் பெறுகிறான். என்பதை ஒரு அரசியல் பார்வையோடு பல இலக்கியச் சந்திப்புகளிலும் அவை பற்றிப் பேசி வருபவர். அனைத்தும் திறந்து விடப்பட்டிருக்கும் இன்றைய தாராளவாதப் பொருளாதாரத்தில் தூண்டப்பட்ட ஆசைகளுடன் முன்னம் இருந்த எளிய வாழ்வை மறந்து மனிதன் யூகப்பொருளாதாரத்தின் வேட்டை விலங்காய் மாறிப் போனதன் அவலங்களோடு வேகமும் ஆற்றலும் எவ்வாறு ஒரு அழிவாய் உலகைச் சூழ்ந்து இருக்கிறது எனும் பார்வையை நம்முன் வைக்கின்றன. அந்த வகையில் உலகளாவிய நவீன கவிதைகளுக்கு இணையாகத்தமிழில் ஒரு பாய்ச்சலாக வெளிப்பட்டிருப்பவை இவரது படைப்புகள்.
தமிழின் சங்ககாலத்திணை மரபுகளில் இருந்து அதன் தொடர்ச்சியாய் நாம் வாழும் இன்றைய நவீனகாலத்திற்கான புதிய திணைகளை தலித்தியம் பெண்ணியம் சூழலியம் போன்ற நுண்ணரசியல்களையும் இணைத்து அதன் பாடு பொருட்களோடு தனக்கேயான தனித்தவகைமையுடன் எழுதுவதில் முதன்மையானவர்! என்று ரமேஷ் பிரேம் கலாப்பிரியா ஞானக்கூத்தன் கல்யாண்ஜி முருகேச பாண்டியன் போன்ற சக கலைஞர்களின் பாராட்டுகளையும் பல விருதுகளையும் பெற்றவர். சில கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் இவரது கவிதைகள் வைக்கப்பட்டுள்ளன.மட்டுமல்லாமல் பரிசோதனை முயற்சியாகச் சில சிறுகதைகளையும் எழுதி உள்ளார்.
கவிஞர் செல்வா பிரியதர்ஷன் ஸ்ரீ சங்கர் இருவராலும்“வீடற்றவர்களின் உலகம்” என்கிற இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் கொண்ட ஒரு தொகுப்பும் வெளி வந்திருக்கிறது. கவிஞர் ஷங்கர் ராமசுப்பிரமணியன் அவர்களால் “யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் வாசிப்பு உரை” என்கிற தொகுப்பும் சமீபத்தில் வந்துள்ளது.
இதுவரை பெற்ற விருதுகள்:
சிறந்த கவிஞருக்கான ஆனந்த விகடன் விருது, விருத்தாச்சலம் களம் புதிது விருது, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் விருது, பாண்டிச்சேரி மீறல் இலக்கியக் கழகத்தின் கபிலர் விருது. திண்டுக்கல் கலை இலக்கியப் பெருமன்றத்தின் பாப்லோ நெரூதா விருது.