நமது தமிழக கிராமங்களுக்கே சொந்தமான மண் வாசனையுடன் கூடிய உணவுப் பண்டங்களை சமைப்பது பற்றி சொல்ல சரியான ஆள் யாரென்று யோசித்தபோது, இன்று திரையுலகில் கணீர் குரல் பாடகியாகவும், நடிகையாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் நாட்டுப்புற நாயகி பரவை முனியம்மா சரியான தேர்வாகத் தோன்றியது. நான் இயக்கி, சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் சக்தி மசாலா சன்டே சமையல் நிகழ்ச்சியில் கிராமத்து விருந்து என்கிற பெயரில் பரவை முனியம்மா சமைத்துக் காட்டிய வித்தியாசமான கிராமத்து உணவுப் பண்டங்களின் சமையல் செய்முறைகளை இங்கு தொகுத்து வழங்கியிருக்கிறோம். ஏற்கனவே, சென்ற ஆண்டு வெளிவந்த இந்த நூலின் முதல் பாகம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற காரணத்தாலும் அதைப் படித்தவர்கள் அனைவருமே அடுத்த பாகத்திற்காக ஆர்வம் தெரிவித்ததாலும் இதோ இப்போது இந்த இரண்டாம் பாகம் இன்னும் பல கிராமத்து சமையல் குறிப்புகளை உள்ளடக்கி வெளி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தையும் படித்துப் பாருங்கள். சமைத்துப் பாருங்கள். மண்வாசனையுடன் சுவைத்துப் பாருங்கள்.
சென்னை பல்கலைக்கழகத்தின் பாரதி மகளிர் கல்லூரியில் B.Com பட்டப்படிப்பை முடித்த திருமதி. விஜயலட்சுமி ரமேஷ், ஆனந்த விகடன் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவின் செயலராக பணியாற்றியவர். பிறகு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றதோடு, ‘சன் டிவி’ மற்றும் ‘கலைஞர் டிவி’ ஆகிய சேனல்களில் புகழ்பெற்ற ‘சக்தி மசாலா சமையல்’ நிகழ்ச்சியை தொடர்ந்து 1000 வாரங்கள் இயக்கிய ஒரே இந்திய இயக்குநர் என்கிற பெருமை திருமதி. விஜயலட்சுமி ரமேஷ் அவர்களுக்கு உண்டு.
அவர் தொலைக்காட்சியில் 20 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கி வந்த, அந்த புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியின் சுவையான பல்வேறு பகுதிகளை இப்போது நீங்கள் மின்னூல் வடிவமாக படிக்கும் வாய்ப்பைப் பெற்று இருக்கிறீர்கள்.