இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1956ஆம் ஆண்டில், 8 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும் அப்போதும் எதுவும் நடக்க வில்லை.
1963ஆம் ஆண்டில் 21 கோடி ரூபாய் செலவில் மறுமதிப்பீடு தயார் செய்யப்பட்டது. திட்டக்குழு ஒப்புதல் அளித்தது. இந்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் இலங்கையின் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயகா அப்போதைய இந்தியப் பிரதமர் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இலங்கையின் ஒரே சர்வதேச துறைமுகமான கொழுப்பு துறைமுகம் தனது முக்கியத்துவத்தை இழந்துவிடும் என்று கூறினார். இலங்கையைத் திருப்திபடுத்துவதற்காகப் பிரதமர் நேரு இத்திட்டத்தை மூட்டை கட்டி வைத்தார்.
ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்குப் பிறகு, இத்திட்டம் இப்போது எடுத்துக்கொள்ளப்பட்டு ஏறத்தாழ 2,500 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. தமிழ் மக்களின் நீண்ட காலக் கனவு நிறைவேற வழி பிறந்துள்ளது.
1981ஆம் ஆண்டில் இத்திட்டம் பற்றிய சாத்திய கூறுகளைக் கண்டறிய இந்திய அரசால் நியமிக்கப்பட்ட இலட்சுமி நாராயணன் குழுவினரிடம் எங்கள் இயக்கத்தின் சார்பாக விண்ணப்பம் ஒன்று அளிக்கப்பட்டது.
1982ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி, தமிழகச் சட்டமன்றத்தில் தமிழன் கால்வாய்த் திட்டம் குறித்து ஒருமணி நேர விவாதத்திற்கான தீர்மானம் கொடுத்தேன். அத்தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட நானும் மற்றக் கட்சித் தலைவர்களும் பேசினோம். அதே மாதம் ஏப்ரல் 15 முதல் மே 15 வரை தமிழன் கால்வாய் உள்ளிட்ட திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வற்புறுத்தித் தமிழகம் முழுவதிலும் கூட்டங்களை நடத்தினோம். 1982ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி இதற்காக மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
மதுரை உட்பட பல முக்கிய நகரங்களில் தமிழன் கால்வாய் குறித்துப் பல கருத்தரங்குகளை நடத்தினோம்.
இந்தப் பணிகள் யாவற்றிலும் எனக்குத் துணையாக நின்றவர் வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் ஆவார். இத்திட்டம் குறித்து விவரமாகவும் விளக்கமாவும் அவர் எழுதி உள்ள இந்த நூல் மக்களுக்கு நன்கு பயன்படும். குறிப்பாக இத்திட்டம் பற்றிப் பல்வேறு தரப்பினர் எழுப்பி உள்ள ஐயங்களைத் தெளிவிக்கும் வகையில் ஏராளமான விவரங்களைக் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் தலையாய தேசியப் பிரச்னைகள், திட்டங்கள் ஆகியவை குறித்து இதுபோன்ற நூல்களை எழுதித் தொண்டாற்ற வேண்டுமென அவரை வேண்டிக்கொள்கிறேன். தமிழ் கூறும் நல்லுலகம் இந்நூலினை வரவேற்கும் என நம்புகிறேன்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன் கரிசல் மண்ணான கோவில்பட்டி அருகிலுள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அரசியலில் தன் தடத்தைப் பதித்து வருகிறார்.
மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நதிகள் இணைப்பு மற்றும் தேசியமயமாக்கல், விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்காகப் பல்வேறு பொதுநல வழக்குகளை உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் போன்றவற்றில் தொடுத்துள்ளார். Amenesty International இயக்கத்திலும் இணைந்து பணியாற்றி வருகிறார். பல்வேறு அரசியல் போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார். தொழிலாளர் அமைச்சகத்தின் குழந்தைத் தொழிலாளர் ஆலோசனைக் குழு போன்ற பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்களின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றியவர் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக மத்திய அரசால் பலமுறை நியமிக்கப்பட்டுள்ளார். கொச்சித் துறைமுகக் கழகத்தின் நடுவராகப் பணியாற்றினார். ஐ.நா. மன்றத்தில் நியூயார்க்கில் கிடைத்த பெரிய பொறுப்பை மறுத்து தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்திய சட்ட மையத்தின் உறுப்பினராகவும் இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவில் இணைச் செயலாளராகவும் பொறுப்பேற்றுப் பணியாற்றுகிறார்.
'உரிமைக்குக் குரல் கொடுப்போம்'. 'மனித உரிமைச் சட்டங்களும் சில குறிப்புகளும்' 'நிமிர வைக்கும் நெல்லை', 'சேதுக்கால்வாய் ஒரு பார்வை. கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி, தமிழ்நாடு 50, 123 இந்தியாவே ஓடாதே நில்', 'கச்சத்தீவு'. தி.மு.க. - சமூக நீதி DMK - Social Justice', "முல்லைப் பெரியாறு, தூக்குக்கு தூக்கு" "அழகர் அணை திட்டம் விவசாயிகள் போராட்டம், ஈழத்தமிழர் பிரச்சனை போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசின் சார்புள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் போன்ற அமைப்புகளுக்கு அரசு வழக்கறிஞராக இருந்துள்ளார். கி.ரா.வின் கதை சொல்லி யின் இணையாசிரியர். மற்றும் பொதிகை - பொருநை - கரிசல் கட்டளை' அமைப்பின் நிறுவனர்.