ரங்கராஜன் சிறுகதை, நகைச்சுவை நாடகம், சமூக நாவல், சரித்திர நாவல், மர்ம நவீனம் என்று பல துறைகளில் எழுதிப் புகழ்பெற்றவர். ஆனாலும், 1980களில் இளைஞராயிருந்தவர்களில் பலருக்கு அவர் மொழி பெயர்ப்பாளர் என்றே தெரிந்திருந்தது, தாராபுரத்தில் நான் பணி புரிந்த சமயம் எல்.ஐ.சி ஊழியர் ஒருவர், பேச்சு வாக்கில், "அவருடைய ஜெஃப்ரி ஆர்ச்சர் மொழிபெயர்ப்புக்காகவே நான் குமுதம் படிக்கிறேன் என்று சொன்னார். ரா.கி.ரவின் நாவல்கள், சிறுகதைகள் பற்றியோ அவர் கேள்விப் பட்டிருக்கவில்லை!
மொழி பெயர்ப்பு, 'முழி பெயர்ப்பாக இருக்கக் கூடாது என்ற கருத்து கொண்டவர்; அதைச் செயல்படுத்தியும் வந்தார். தன் சக ஆசிரிய நண்பர் ஜ.ரா.சு.விடம் ரங்கராஜன் சொல்வாராம்: "முதலில் ஆங்கில ஒரிஜனலை முழுவதுமாகப் படித்து விட வேண்டும். மனத்தில் கிரகித்து கொண்ட பின்னர், அது நாம் எழுதுகிற கதை; நம்முடைய நடையில் எழுதி விட வேண்டும்."
எந்தப் புத்தகமானாலும் சரி - நாவல், சிறுகதை, தன்னம்பிக்கை நூல், சுயசரிதை - இதுபோல் எல்லா மொழி பெயர்ப்புகளிலும், தன் கருத்தை நூற்றுக்கு நூறு கடைப்பிடித்து வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய முதல் மொழி பெயர்ப்பு நாவல் “புரட்சித் துறவி” மேரி கோரில்லியின், 'மாஸ்டர் கிறிஸ்டியன்'; (அறிஞர் அண்ணா இறுதி நாளில் படுக்கையில் இருந்தபடி படித்த நூலாம் இது). இது பிரசுரமான பிறகு 1972களில் வெளியான பட்டாம்பூச்சி', ஏகப்பட்ட ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.
இந்த சுயசரிதை முகமது அலியின் 'The Greatest' என்ற ஆங்கில நூலின் சுருக்கம். நீக்ரோ அமெரிக்கனான காளியஸ் கிளே, தன் இனத்தவர்களுக்கு நேர்கிற கொடுமைகளைக் கண்டு மதம் மாறுகிறான்; அவனுக்குக் குத்துச் சண்டை வீரனாக வேண்டுமென்பதே ஒரே லட்சியம். மதம் மாறுகிற - மாறின தன்மைக்கும் சண்டை வீரனாக மகத்தானவனாக வேண்டும் என்கிற தீவிர நம்பிக்கைக்கும் இடையே நிகழும் மோதல்கள்தான் சரிதம்.
ஆசிரியரின் வெகு இயல்பான நடைக்கும், சரளத்துக்கும் சில உதாரணங்கள்:
''பழங்காலத்தில், ஏதாவதொரு கறுப்பனின் சாதனையை வெள்ளைக்காரர்கள் ஒப்புக் கொள்ள நேரிடும்போது அது கறுப்பர்களின் திறமை என்றோ, மேதை என்றோ ஆற்றல் என்றோ சொல்லமாட்டார்கள். அந்தக் கறுப்பனின் உடலில் வெள்ளை ரத்தம், இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் தேடுவார்கள். அதே போல், ஒரு கறுப்பனிடம் எத்தனைதான் வெள்ளை ரத்தம் கலந்திருக்கட்டுமே, திருடனாகவோ குடிகாரனாகவோ அவன் இருக்க நேர்ந்தால் அவனுடைய 'வெள்ளை ரத்தத்தை விட்டு விடுவார்கள். அப்போது அவன் வெறும் கருப்பன்தான்''
குத்துச்சண்டை வர்ணனை பற்றி குத்து விழக் கூடிய அளவுக்கு எதிரிக்குக் கிட்டத்தில் முகத்தைக் கொண்டு செல்வது, குத்துமாறு எதிரொளியை ஊக்குவது, பிறகு கண்களை அகலம் திறந்து வைத்துக் கொண்டு பக்கவாட்டில் வலது புறம் அல்லது இடது புறம் நகர்ந்து விடுவது, பிறகு குத்து விடுவது, சட்டென்று மீண்டும் குத்து விழக்கூடிய கிட்டத்தில் தலையை நீட்டுவது வெறும் காற்றையே குத்திக் கொண்டிருந்தால் எப்படிப்பட்ட குத்துச் சண்டைக்காரனுக்கும் அயர்வு ஏற்படத்தானே செய்யும்?''
இதைப் படிக்கும்போது கல்கி தமிழ்நாட்டில் 1952 வருடம் பாரத சாம்பியன் பட்டத்துக்கான மல்யுத்த போட்டி நடந்தன; அவர் ஆதரித்தது நினைவு வந்தது. தன் வாதத்துக்குத் தோதாக மகாபாரத்தினை மேற்கோள் காட்டி இடும்பனும் வீமனும் மற்போர் இருவரை அட்டையில் வெளியிட்டார்.
நான் ரங்கராஜனின் பரம ரசிகன். 1957ம் ஆண்டு ஆரம்பித்த தொடர்பு, இறுதி வரை நீடித்தது. அவருடைய எந்தப் படைப்பானாலும் படித்து மகிழ்வேன். அவர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயித்து கொண்டே இருப்பேன்' சுயசரிதையைப் படித்த போது கண் கலங்கியது. இராமருக்கு அணில் உதவி செய்தது போல நூலுக்கு என்னை முன்னுரை எழுத வாய்ப்பு அளித்திருக்கிறார் அலையன்ஸ் சீனிவாசன், அவருக்கு என் நன்றி.
- வாதுலன்
ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.
- கல்கி
'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.
- சுஜாதா