மருத்துவர் ரவிக்குமார்க்கு அவர் பேசும்போதும் சரி, எழுதும்போதும் சரி நகைச்சுவை அவரோடு கைகோர்த்துக் கொள்ளும். எனக்குத் தெரிந்தவரை பேச்சாலும் சரி, எழுத்திலும் சரி, சோ.ராமசாமி அவர்கள்தான் இதில் வல்லவர். இப்போது ரவிக்குமார். சில உதாரணங்கள். "மீடியா போராளிகளுக்காக எழுதப்பட்ட நூல் அல்ல இது. மீடியாக்களில் வரும் மருத்துவக் கருத்துக்களில் எத்தனை சதவீதம் உண்மை என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்." "நாட்டு வைத்தியம், NOT வைத்தியம், You tube வைத்தியம். தலை ஒன்று வலி நூறு. தலை இருக்கும் வரை வலியும் இருக்கும். சிலருக்கு மாமியாரைக் கண்டால் உடனடியாகத் தலைவலி வந்துவிடும். நாத்தனார் வந்தால் தலையில் இடி விழுந்தது போல் வலி வந்துவிடும். சில ஆண்களுக்கு மனைவி தங்களைப் பார்த்தால் எல்லா வலிகளும் காணாமல் போய்விடும்.
இப்படி மருத்துவர் ரவிக்குமார் ஜாலியாக கமெண்ட் அடித்துக் கொண்டே சீரியசான ஒரு நூலை எழுதியிருக்கிறார்.
பொது மருத்துவ நிபுணர், 33 வருட மருத்துவ ஆசிரியராக அனுபவம் உள்ளவர். 200-க்கு மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், 7 மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். தற்போது அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக உள்ளார்.